அதிக காலம் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியவர் என்ற சிறப்பை பெற்ற சோம்நாத் சாட்டர்ஜி இன்று காலமானார். சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் என்ற விருதைப் பெற்ற சோம்நாத் சாட்டர்ஜி கடந்து வந்த பாதை குறித்து பார்க்கலாம்.
அசாம் மாநிலத்தில் தேஸ்பூரில் 1929ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25ஆம் தேதி சோம்நாத் சாட்டர்ஜி பிறந்தார். தந்தை நிர்மல் சந்திர சாட்டர்ஜி கொல்கத்தாவில் வழக்கறிஞராக இருந்ததால் சோம்நாத் சாட்டர்ஜியின் குடும்பம் அங்கு குடியேறியது. பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை முடித்த பின் சோம்நாத் சாட்டர்ஜி கேம்பிரிட்ஜில் உள்ள ஜீசஸ் கல்லூரியில் சட்டப் பட்டப்படிப்பை முடித்தார். கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றிய அவர், 1950ஆம் ஆண்டு ரேனு சாட்டர்ஜியை திருமணம் செய்துகொண்டார். 1968ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த அவர் மத்திய குழு உறுப்பினராக பதவி வகித்தார்.
1971ஆம் ஆண்டு சோம்நாத்தின் தந்தை நிர்மல் சந்திர சாட்டர்ஜி மேற்குவங்க மாநிலம் BURDWAN தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். அவர் காலமான நிலையில் அதே தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் சோம்நாத் சாட்டர்ஜி வெற்றி பெற்று முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். பத்து முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அவர் நாட்டிலேயே அதிக காலம் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியவர் என்ற சிறப்பை பெற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவராக இருந்த சோம்நாத் சட்டர்ஜி கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மக்களவை சபாநாயகராக இருந்தார். நேர்மைக்கு முன்னுதாரணமாக திகழும் சோம்நாத் சாட்டர்ஜி, கடந்த 1996ஆம் ஆண்டு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் என்ற விருதையும் பெற்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆதரவைத்திரும்பப் பெற்ற பின், சோம்நாத் சாட்டர்ஜி, சபாநாயகராக பதவியில் விலக மறுத்ததால் 2008ஆம் ஆண்டு கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். நீண்ட நாட்களாக சிறுநீரக பாதிப்பால் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு ஒரு மகனும் இரு மகள்களும் உள்ளனர். மகன் பிரதாப் சாட்டர்ஜி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். மகள்கள் அனுராதா, அனுசிலா ஆகியோர் நடனக்கலைஞர்களாக உள்ளனர்.