''2500 ராணுவ வீரர்கள் ஒரே நேரத்தில் பயணம் செய்தபட்சத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எந்த அளவில் இருந்தது என்ற கேள்வியை பலரும் எழுப்பியுள்ளனர்''
காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் இருந்து 78 வாகனங்களில் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினர் ஸ்ரீநகர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அவர்களின் வாகனம் புல்வாமா மாவட்டத்தின் அவாந்திபோரா என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, 350 கிலோ வெடிபொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த கார், சி.ஆர்.பி.எப். பேருந்து மீது மோதியது. அப்போது 350 கிலோ வெடிப்பொருட்களும் வெடித்து சிதறியது. மனித வெடிகுண்டுதாக்குதலில் பேருந்தில் பயணித்த 76-வது பட்டாலியனைச் சேர்ந்த வீரர்கள், 44 பேர் உயிரிழந்தனர்.
நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த தாக்குதலுக்கு இந்தியாவே ஒருமித்த குரலில் கண்டன குரல் எழுப்பியுள்ளது. பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என்றும், அதுவரை ஓயமாட்டோம் எனவும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் 2500 ராணுவ வீரர்கள் ஒரே நேரத்தில் பயணம் செய்தபட்சத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எந்த அளவில் இருந்தது என்ற கேள்வியை பலரும் எழுப்பியுள்ளனர். 78 வாகனங்களின் 320 கிமீ பயணம் என்பது நீண்ட பயணம். இந்த பயணத்துக்கான சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் கொடுக்கப்பட்டதா என்ற கேள்வியை பலரும் எழுப்புகின்றனர். அப்படி வீரர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தால், 350 கிலோ வெடிப்பொருட்களுடன் ஒரு கார் நெருங்கி வருவது எப்படி சாத்தியமானதாகி இருக்கும் என்றும் கேள்விகளை அடுக்குகின்றனர்.
இந்த தாக்குதல் குறித்து பேசிய ஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநரின் ஆலோசர் விஜயகுமார், 24 மணி நேரமும் பாதுகாப்பு உள்ளது, விழிப்புடன் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். எவ்வளவு விழிப்புணர்வுடன் இருந்தாலும் திடீரென நடக்கும் தாக்குதலை எதிர்கொள்வது என்பது கடினம் என்று தெரிவித்துள்ளார். ஆனால் பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறை இருந்தது என ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக் தெரிவித்துள்ளார். தாக்குதல் குறித்து இந்தியா டுடே தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் கூறிய அவர், ராணுவ வீரர்கள் ஒரே நேரத்தில் இத்தனை பெரிய அணிவகுப்பாக வந்திருக்கக்கூடாது. தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் வேகமாக சென்றிருந்தால் தாக்குதல் சாத்தியப்பட்டிருக்காது. ஆனால் சில இடங்களில் பாதுகாப்பு குறைவாகவே இருந்தது. சரியான சோதனைகள் இருந்திருந்தால் வெடிபொருட்களுடன் ஒரு கார் வந்திருக்கவே முடியாது. உண்மையாகவே இந்த தாக்குதலுக்கு பாதுகாப்பு குறைபாடும் ஒரு காரணம் தான். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க வேண்டிய நிலையில் தற்போது இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
2500 வீரர்கள் 78 வாகனங்களில் சென்ற இந்த நீண்ட பயணம் தமிழகத்திலோ, கேரளாவிலோ அரங்கேறவில்லை. என்றுமே பதட்ட நிலையில் இருக்கும் காஷ்மீரில் நடந்த பயணம். அப்படி இருக்க, அவர்களுக்கான பாதுகாப்பு உச்ச நிலையில் தான் இருந்திருக்க வேண்டும், ஆனால் மிகவும் சாதாரணமாகவே ராணுவ வீரர்களின் பயணம் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. அதன் விளைவு தான் 44 பேரின் உயிரிழப்பு. இந்த சம்பவம் இந்தியா என்ற மிகப்பெரிய நாடு பாதுகாப்பு விவகாரத்தில் தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ளவேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்பதையே காட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.