பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. பாஜக - ஐக்கிய ஜனதா தளம் இணைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மையை பெற்று அங்கு ஆட்சி அமைக்கிறது. தற்போது முதல்வராக இருக்கும் நிதிஷ் குமார் நான்காவது முறையாக முதல் அமைச்சர் பதவி ஏற்க உள்ளார்.
இந்நிலையில் பாலிவுட் நடிகர் சோனு சூட், பீகார் தேர்தல் முடிவு குறித்து தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார். என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறுகையில், ‘’ யார் வெற்றி பெற்றாலும் அது முக்கியமல்ல. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, பீகாரின் வளர்ச்சிநிலை உயர்ந்திருக்க வேண்டும். ஆட்சி இறுதியில் மக்களின் தேவைகளை நிறைவேற்றியதற்கு ஆட்சியாளர்கள் பெருமைப்பட வேண்டும்.
நான் பீகாரில் நிறைய பேருடன் தொடர்பு கொண்டுள்ளேன், கல்வி, உட்கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகளில் மக்கள் மோசமான நிலையில் உள்ளனர்.
நம் நாட்டு மக்களுக்கு நிறைய நம்பிக்கைகள் உள்ளன, சில சமயங்களில் அவர்கள் உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பையும் தருகிறார்கள். அல்லது மூன்றாவது வாய்ப்பையும் தருகிறார்கள். ஆனால் தங்களது வாழ்க்கைத் தரம் உயர சிறந்த தளத்தை ஆட்சியாளர்களிடமிருது மக்கள் எதிர்பார்க்கிறார்கள்’’ என்றார் அவர்.
கொரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் செல்வதற்கு உதவியவர் நடிகர் சோனு சூட். தனது சொந்த பணத்தில், பல்வேறு மாநிலங்களில் சிக்கிக் கொண்டவர்களை பஸ்கள், ரயில், விமானம் மூலம் அனுப்பி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. .