சூரிய கிரகணம் காரணமாக அடுத்தமாதம் 26 ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை 4 மணி நேரம் அடைக்கப்படும் என்று தேவஸம் போர்டு அறிவித்துள்ளது. மேலும் அந்நேரத்தில் பக்தர்கள் யாரும் பம்பாவில் இருந்து சன்னிதானம் நோக்கி அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில், மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக ஆண்டு தோறும் 60 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். இந்தாண்டு வரும் 16ஆம் தேதி மாலை ஐயப்பன் கோவில் திறக்கப்பட்டது. டிசம்பர் 27ஆம் தேதி மண்டலப்பூஜை நிறைவடைந்து கோயிலின் நடை மூடப்படும். பின்பு மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30 ஆம் தேதி திறக்கப்பட்டு ஜனவரி 15ஆம் தேதி மகரவிளக்கு பூஜையும், ஜோதி தரிசனமும் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இந்தாண்டு சூரிய கிரகணம் டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி காலை 8.06 முதல் காலை 11.13 மணி வரை நடைபெறுகிறது. இதன் காரணமாக ஐயப்பனுக்கு வழக்கமாக நடைபெறும் நெய் அபிஷேகம் அன்றைய தினம் காலை 7.30 மணிக்கே நிறுத்தப்பட்டு கோயிலின் நடை அடைக்கப்படும். இந்நிலை காலை 11.30 மணி வரை நீடிக்கும். பின்பு கோயிலில் கிரகண தோஷ நிவரத்தி பூஜைகள் செய்யப்பட்டு திறக்கப்படும். அதுவரை பக்தர்கள் யாரும் கோயிலுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.