சமூக வலைதளத்தில் பதிவிடுவது அடிப்படை உரிமை என திரிபுரா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திரிபுராவைச் சேர்ந்தவர் அரிந்தம் பட்டாசார்ஜி. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர், பாஜகவின் சிஏஏ ஆதரவு தொலைபேசி விழிப்புணர்வு திட்டம் குறித்து அவதூறு பரப்பியதாக பாஜக குற்றம் சாட்டியது. சிஏஏவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமென்றால் 8866288662 என்ற எண்ணுக்கு அழைப்பு கொடுக்கலாம் என பாஜக தெரிவித்திருந்தது. 'நீங்கள் 8866288662 என்ற எண்ணுக்கு அழைப்பு விடுத்தால் உங்கள் போன் ஹேக் செய்யப்படும்' என அரிந்தம் தன் பேஸ்புக்கில் பதிவிட்டதாக தெரிகிறது. இது குறித்து பாஜக அளித்த புகாரின்பேரில் அரிந்தம் பட்டாசார்ஜி கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு திரிபுரா உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி அகில் குரேஷி, சமூக வலைதளத்தில் பதிவிடுவது அடிப்படை உரிமை என தெரிவித்தார். மேலும், கைது செய்யப்பட்ட நபர் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கக்கூடாது என தெரிவித்த நீதிபதி, இது போன்ற கைது நடவடிக்கைகளை போலீசார் செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டார்.
இது தொடர்பாக நீதிபதி கூறிய உத்தரவில், சமூக வலைதளத்தில் பதிவிடுவது அடிப்படை உரிமை. இது அரசு ஊழியர்கள் உட்பட அனைத்து குடிமக்களுக்கும் பொருந்தும் என குறிப்பிட்டுள்ளார். நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு திருபுரா காங்கிரஸ் நிர்வாகிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த நிர்வாகி, சுபால் போவ்மிக், இது இந்திய அரசியலமைப்பின்படியான தீர்ப்பு. இனிமேலும் காவலர்கள் அரசியல் தலைவர்களுக்கு உதவியாளர்கள் போல் செயல்படாமல், சட்டப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், இளைஞர்களும், மக்களும், சின்ன சின்ன கருத்துகள் பதிவிட்டாலே தண்டிக்கப்படுகிறார்கள் என அவர் குற்றம் சாட்டினார்.