பீகார் சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதையொட்டி பரப்புரையில் ஈடுபட்ட ராஷ்டீரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் மீது செருப்பு வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் முதல் கட்டமாக வரும் அக்டோபர் 28 ஆம் தேதி நடைபெறுகிறது. இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட தேர்தல் நவம்பர் 3 மற்றும் 7 ஆம் தேதி நடைபெறுகிறது. நவம்பர் 10 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், மெகா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் தேசிய ஜனநாயக கூட்டணியே மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரியவந்துள்ளது. ஆனாலும் ராஷ்டீரிய ஜனதா தள கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், நிதிஷ் குமாருக்கு கடும் டஃப் கொடுப்பார் என கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், பீகார் சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் திங்கள்கிழமை முதல்வர் நிதிஷ் குமாரிடம் வெளிப்படையான விவாதத்திற்கு சவால் விடுத்தார். அதாவது வளர்ச்சி பிரச்னையில் தன்னுடன் விவாதிக்க முதல்வர் நிதிஷ்குமார் எந்த நேரம், எந்த இடத்தையும் தேர்வு செய்து கொள்ளட்டும் என தேஜஸ்வி யாதவ் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து அனைத்து கட்சி தலைவர்களும் ஆட்சியை பிடிக்க பரப்புரை நடவடிக்கையில் இறங்கி விட்டனர். அதன்படி ராஷ்டீரிய ஜனதா தள கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் அவுரங்காபாத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். அப்போது தேஜஸ்வி யாதவை நோக்கி செருப்புகள் வீசப்பட்டன. அவரின் இடது பக்க தோள் அருகே பறந்த செருப்பு அதிர்ஷ்டவசமாக அவர் மீது படவில்லை. ஆனால் 2-வதாக வந்த செருப்பு அவரது மடியில் விழுந்தது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.