“வாய் தவறி பேசிவிட்டேன்”- சத்ருஹன் சின்ஹா விளக்கம்
பாகிஸ்தான் உருவாக காரணமான முகமது அலி ஜின்னாவும் காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர் என வாய் தவறி கூறிவிட்டதாக நடிகரும், காங்கிரஸ் பிரமுகருமான சத்ருஹன் சின்ஹா விளக்கம் அளித்துள்ளார்.
அண்மையில் பாஜகவில் இருந்து விலகி, காங்கிரஸ் கட்சியில் இணைந்த சத்ருஹன் சின்ஹா இந்த மக்களவைத் தேர்தலில் பீகார் மாநிலம் பாட்னா சாஹிப் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்தச் சூழலில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாராவில நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் சத்ருஹன் சின்ஹா கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், நாட்டின் விடுதலைக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களே பெரும் பங்கு வகித்தனர் என தெரிவித்தார். மேலும், இதன் காரணமாகவே பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்ததாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், மகாத்மா காந்தி முதல் முகமது அலி ஜின்னா வரை அனைவரும் காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் என தெரிவித்தார்.
பாகிஸ்தான் உருவாக காரணமான முகமது அலி ஜின்னா முஸ்லிம் லீக் கட்சியை சேர்ந்தவர். ஆனால் அவர் காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர் என சத்ருஹன் சின்ஹா தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், வாய் தவறி ஜின்னாவின் பெயரை குறிப்பிட்டு விட்டதாக விளக்கம் அளித்தார்.