‘துரோகிகளை சுடுங்கள்’ என இளைஞர்கள் சிலர் கோஷம் போடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. அதையடுத்து, டெல்லியின் வடகிழக்கு பகுதி போர்க்களமாக மாறியது. இந்த வன்முறையில் 39 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் டெல்லி கலவரம் குறித்து மக்கள் மனதில் நிலவி வரும் அச்சத்தைப் போக்கி இயல்பு நிலைக்கு கொண்டுவர உள்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் நாள்தோறும் ஆய்வு செய்து வருகின்றனர். இதனிடையே வன்முறையால் சேதமான பகுதிகளை துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் நேற்று நேரில் ஆய்வு நடத்தினார். ஒவ்வொரு இடமாக சென்ற அவர் பாதிக்கப்பட்ட மக்களிடம் பேசியதோடு சேதவிவரம் குறித்து கேட்டறிந்தார்.
இந்நிலையில் புது டெல்லியிலுள்ள ராஜீவ் செளக் மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் சிலர் கும்பலாக குழுமி ‘கோலி மாரோ’ எனக் கோஷம் எழுப்பும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘தேஷ் கே காட்டரோன் கோ, கோலி மாரோ’ என அவர்கள் ஹிந்தியில் முழக்கம் இடுகின்றனர். அதாவது ‘துரோகிகளை சுடுங்கள்’ என பொது இடம் ஒன்றில் அவர்கள் அனைவரும் குரல் எழுப்பி செல்வதை கண்ட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இது குறித்து ராஜீவ் செளக் மெட்ரோ ரயில் நிலைய மக்கள் தொடர்பு அதிகாரி அனுஜ் தயால் கூறியபோது, “எங்களது டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் காலை 10.52 மணிக்கு உள்ளே புகுந்த சிலர் இந்தக் கோஷத்தை எழுப்பிச் சென்றனர். உடனடியாக அவர்கள் ரயில்வே காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்” என்றார்.
“டெல்லி மெட்ரோ பராமரிப்பு சட்டம் 2002-ன்படி, இந்த வளாகத்திற்குள் எந்தவிதமான ஆர்ப்பாட்டமோ அல்லது தொல்லை கொடுப்பதோ சட்டப்படி தடைசெய்யப்பட்டுள்ளது. அப்படியான செயல்களில் ஈடுபடுபவர்கள் உடனே அகற்றப்படுவார்கள்”என்று டெல்லி மெட்ரோ கார்ப்பரேஷன் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.
இதனிடையே இந்தக் குறிப்பிட்ட வீடியோவை சமூக வலைத்தளத்தில் வைபவ் சக்சேனா என்பவர் எடுத்து பகிர்ந்துள்ளார். அதற்கு சிலர் கடுமையான கண்டனங்களையும் கூறி வருகின்றனர். ரயில் நிலையத்தில் குரல் எழுப்பிய ஆறு இளைஞர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்படத்தக்கது.