தந்தை ஸ்தானத்தில் கெஜ்ரிவால்: இனிதே நடந்த பஞ்சாப் முதல்வர் திருமணம் - யார் இந்த மணப்பெண்?

தந்தை ஸ்தானத்தில் கெஜ்ரிவால்: இனிதே நடந்த பஞ்சாப் முதல்வர் திருமணம் - யார் இந்த மணப்பெண்?

தந்தை ஸ்தானத்தில் கெஜ்ரிவால்: இனிதே நடந்த பஞ்சாப் முதல்வர் திருமணம் - யார் இந்த மணப்பெண்?
Published on

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் திருமணம் சண்டிகரில் எளிமையான முறையில் இனிதே நடைபெற்று முடிந்துள்ளது. இதையடுத்து பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

48 வயதான பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஏற்கனவே இந்திரப்ரீத் கவுர் என்பவரை திருமணம் செய்திருந்தார். இந்த தம்பதிக்கு 21 வயதில் சீரத் கவுர் மான் என்ற மகளும், 17 வயதில் தில்ஷன் மான் என்ற மகனும் உள்ளனர். குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் ஒருமித்த கருத்து அடிப்படையில், கடந்த 2015-ம் ஆண்டு விவாகரத்துப் பெற்றனர். இதையடுத்து இரண்டு குழந்தைகளுடன் அவரது முன்னாள் மனைவி இந்திரப்ரீத் கவுர் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், தனது தாய் மற்றும் சகோதரியின் அன்பு வற்புறுத்தலின் பேரில், முதல்வர் பகவந்த் மான் இரண்டாவது முறையாக திருமணம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து சண்டிகரில் உள்ள அரசு இல்லத்தில் முதல்வர் பகவந்த் மான், 32 வயதான குர்ப்ரீத் கவுர் என்பவரை இன்று திருமணம் செய்துகொண்டார். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் சீக்கிய முறைப்படி எளிமையாக இந்தத் திருமணம் நடைபெற்றது.

இந்த விழாவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி. ராகவ் சத்தா ஆகியோர் கலந்துகொண்டனர். பகவந்த் மானின் திருமணத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தந்தை முறையில் இருந்து அனைத்து முக்கிய சடங்குகளையும் செய்துவைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அவர் கூறுகையில், “எனது இளைய சகோதரரும், பஞ்சாப் முதல்வருமான பகவந்த் மான் திருமணம் செய்துகொண்ட இந்த நாள் எனக்கு மிகவும் மகிழ்ச்சியான நாள். அவரது வாழ்க்கை புதிய அத்தியாயத்தை துவங்குகிறது. அவருக்கு மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை கடவுள் ஆசீர்வதிக்கட்டும். தம்பதிகள் இருவரும் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கட்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதேபோல் ஆம் ஆத்மி எம்பி ராகவ் சத்தா பேசுகையில், “முதல்வர் பகவந்த் மானின் வாழ்க்கையில் இன்று ஒரு புதிய அத்தியாயம் தொடங்கப் போகிறது. பகவந்த் மானின் குடும்பத்தினருக்கும், அவரது தாய் மற்றும் சகோதரிக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

யார் இந்த குர்ப்ரீத் கவுர்?

ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ரா மாவட்டத்தின் பெஹோவா கிராமத்தைச் சேர்ந்தவர் தான் மணப்பெண் குர்ப்ரீத் கவுர். இவரது தந்தை இந்தர்ஜித் சிங் நாட் விவசாயி. மதன்பூர் கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் என்று கூறப்படுகிறது. குர்ப்ரீத் கவுர் தாயார் இல்லத்தரசியாக இருக்கிறார். இந்தத் தம்பதியின் முதல் இரண்டு மகள்கள் வெளிநாடுகளில் உள்ளனர். கடைசி மகளான குர்ப்ரீத் கவுர், ஆம்பாலா மாவட்டம் முல்லானாவில் உள்ள மகரிஷி மார்கண்டேஸ்வரர் பல்கலைக்கழகத்தில் 2013 முதல் 2018 வரை மருத்துவம் படித்துள்ளார். தற்போது மருத்துவராக பணியாற்றி வருவதாகவும் சொல்லப்படுகிறது.

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் குர்ப்ரீத் கவுர் ஆகிய இருவருரின் குடும்பங்களும் நீண்ட காலமாகவே நட்புடன் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் புதுமணத் தம்பதிகள் இருவருக்கும் மக்களவை சபாநாயக்கர் ஓர் பிர்லா, பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் அம்ரீந்தர் சிங் ராஜா, பஞ்சாப் அமைச்சர்கள் ஹர்ஜோத் பெயின்ஸ், அமேன் அரோரா உள்பட அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com