ஏர் இந்தியா ஊழியரை சிவசேனா எம்.பி ரவீந்திர கெயிக்வாத் செருப்பால் அடித்த செயல் டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் உஸ்மானாபாத் தொகுதி எம்.பி-யாக இருப்பவர் சிவசேனா கட்சியை சார்ந்த ரவீந்திர கெய்க்வாத். இவர் இன்று காலை புனேவில் இருந்து டெல்லி செல்லும் ஏஐ 852 ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தார். பிசினஸ் கிளாஸில் டிக்கெட் எடுத்திருந்த அவருக்கு எகானமி கிளாஸில் சீட் ஒதுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த அவர் விமான ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன் பிறகு, விமான ஊழியரை ‘25 முறை’ தன் காலணியால் அடித்துள்ளார்.
காலணியால் விமான ஊழியரை அடித்ததை ஒத்துக்கொண்ட எம்.பி கெயிக்வாத், தான் மன்னிப்பு கோர முடியாது என்றும் ஏர் இந்தியா நிர்வாகம் தான் தன்னிடம் மன்ணிப்பு கேட்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள ஏர் இந்தியா நிர்வாகம், எம்.பி ரவீந்திர கெயிக்வாத் பிசினஸ் கிளாஸில் டிக்கெட் எடுத்திருந்தாலும் அதனை எகானமி கிளாஸ் மட்டும் இருக்கும் விமானத்திற்கு அதனை மாற்றி கொண்டார் எனவும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்தது.
சிவசேனா எம்.பி-யின் இந்த செயல் சமூக வலைதளங்களில் பெரும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது.