கொரோனா பேரலையிலும் போராட்டம்: வேளாண் சட்ட எதிர்ப்பு விவசாயிகள் நிலை என்ன?!

கொரோனா பேரலையிலும் போராட்டம்: வேளாண் சட்ட எதிர்ப்பு விவசாயிகள் நிலை என்ன?!
கொரோனா பேரலையிலும் போராட்டம்: வேளாண் சட்ட எதிர்ப்பு விவசாயிகள் நிலை என்ன?!
Published on

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல மாநில விவசாயிகள் டெல்லியில் நடத்தும் போராட்டம் 170 நாள்களாக தொடருகிறது. கொரோனா பேரலைக்கு மத்தியிலும் அங்கு என்ன நிகழ்கிறது என்பதை சற்றே விரிவாக பார்ப்போம்.

சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் டெல்லியின் எல்லைகளின் போராட்டக் களத்தை விட்டு இன்னும் அகலவில்லை. கொரோனா இரண்டாம் அலை டெல்லி, ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் தீவிரமடைந்து வருகிறது. பஞ்சாபில் நேற்று மட்டும் 8,652 புதிய கொரோனா பாதிப்புகளும் 197 இறப்புகளும் பதிவாகியுள்ளன. ஹரியானாவில் 12,712 கொரோனா பாதிப்புகளும் கிட்டத்தட்ட 160 இறப்புகளும் பதிவாகியுள்ளன. டெல்லியிழும் இதே நிலைதான்.

இப்படியான சூழ்நிலையில் டெல்லியின் மூன்று எல்லைகளான - திக்ரி, சிங்கு மற்றும் காசிப்பூர் ஆகியவை விவசாயிகள் எதிர்ப்பால் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கின்றன. டெல்லி, ஹரியானா மற்றும் பஞ்சாப் என மூன்று மாநிலங்களிலும் கொரோனா கால லாக்டவுன் விதிக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும், விவசாயிகள் தங்கள் வீடுகளுக்கும், போராட்டக் களத்துக்கும் சர்வ சாதாரணமாக பயணிக்கின்றனர். சில விவசாயிகள் முகக்கவசங்களை அணிந்துகொள்கிறார்கள். இன்னும் சிலர் முகத்தில் துணி போர்த்தப்பட்டிருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலானோர் மாஸ்க் அணியாமல் இருக்கிறார்கள்.

போராட்டக் களத்தில் இருப்பவர்கள் யாருக்கும் கொரோனா பாதிப்பில்லை எனக் கூறுகிறார்கள் விவசாய சங்கத்தினர். ஆனால், திக்ரி போராட்டக் களத்தில் பங்கேற்ற 26 வயது பெண் ஏப்ரல் 30 அன்று கொரோனா காரணமாக உயிரிழந்தார் என்று பத்திரிகை செய்திகள் சொல்கின்றன. அந்தப் பெண் ஏப்ரல் 11 அன்று திக்ரி எல்லைக்கு ஆறு பேருடன் வந்திருந்தார். இவர் வந்த 10 நாட்களில் கிசான் சமூக ராணுவம் என்று அழைக்கப்படும் ஒரு போராட்டக் குழுவின் ஒரு பகுதியினர் பலருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட துவங்கியது. இதில் அந்தப் பெண்ணும் அடக்கம்.

நிலைமை இப்படி இருக்க விவசாயிகள் தங்கள் போராட்டங்களை காலவரையின்றி தொடர திட்டமிட்டுள்ளனர். கொரோனா இரண்டாம் அலைக்கு மத்தியிலும் அவர்கள் போராட்டத்தை தொடரப்போவதாக அறிவித்துள்ளது சுகாதாரம் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இது தொடர்பாக பேசியுள்ள பாரதிய கிசான் யூனியனின் (ராஜேவால்) தலைவர் பல்பீர் சிங் ராஜேவால் என்பவர், ``நாங்கள் இப்போது திரும்பிச் சென்றால், யாரும் எங்களை கவனிக்கப் போவதில்லை. அரசாங்கம் எதிர்ப்புகளின்றி சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை நிரந்தரமாக்கும். இந்தச் சட்டங்கள் தொடர்ந்தால், எங்கள் எதிர்காலம் முடிந்துவிட்டது. எனவே, இதுதான் தற்போதைய எங்களின் வாழ்வா, சாவா போராட்டம்.

இப்போது, இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் கூட, நாங்கள் கொரோனா காரணமாகவோ அல்லது பசியின் காரணமாகவோ இறந்தால் எங்களைப் பற்றி அரசு கவலைப்படபோவதில்லை என்பது தெளிவாகியுள்ளது. அரசாங்கம் உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால், அவர்கள் ஏன் எங்கள் கோரிக்கைகளை ஏற்க முடியாது" என்றவரிடம், கொரோனா காரணமாக விவசாயிகள் இறந்தால் அதற்கு சங்கங்கள் பொறுப்பேற்குமா என்ற கேள்விகேட்கப்பட்டது.

அதற்கு அவர், "இல்லை. இங்குள்ள விவசாயிகள் வைரஸால் பாதிக்கப்பட்டால், அது மோடியின் தவறு. அது அமித் ஷாவின் தவறு. நாங்கள் யாரும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் கட்சி அல்ல. நாங்கள் எங்கள் உரிமைகளைக் கேட்கும் விவசாயிகள். விவசாயிகள் மீது அக்கறை கொண்டிருப்பதாக சொல்லும் இந்த அரசாங்கம் ஏன் எங்களுக்கு தடுப்பூசி போடவில்லை. இதற்காக சட்டங்களை எதிர்க்கும் எங்கள் அரசியலமைப்பு உரிமையை நாங்கள் விட்டுவிடுவோம் என்று எதிர்பார்த்தால் அது நடக்காது. தற்போது நிலவரப்படி இங்கு தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்படுவதை விவசாயிகள் வரவேற்கவே செய்வார்கள்.

கொரோனா முன்னெச்சரிக்கையாக சிங்கு எல்லையில் குளிர்பானங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. சூடான உணவு மற்றும் பானங்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன. வயதானவர்களுக்கு ஒவ்வொரு நாளும் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் டி மாத்திரைகளும் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு லங்கருக்கும் பிறகு, விவசாயிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கதா என்ற மூலிகை தேநீர் வழங்கப்படுகிறது. 40 மருத்துவர்கள் அடங்கிய குழு எங்களை பாதுகாத்து வருகிறார்கள். எங்களிடம் 10 ஆக்ஸிஜன் சிலிண்டர்களும் 10 படுக்கைகளும் உள்ளன. யாருக்காவது காய்ச்சல் வந்தால், அதைக் குறைக்க உடனடியாக அவர்களுக்கு மருந்துகளை வழங்குகிறோம்.

தேவையான முன்னெச்சரிக்களை எடுத்து வருகிறோம். ஆனால் ஒருபோதும் இந்த இடத்தை விட்டுச் செல்ல மாட்டோம். நாங்கள் ஏற்கனவே கூறியது போல, தேவைப்பட்டால் நாங்கள் இன்னும் ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடம் உட்கார்ந்திருப்போம். அரசாங்கம் பேசத் தயாராக இருக்கும்போது, நாங்கள் மீண்டும் பேசுவோம்" என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.

- மலையரசு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com