உன்னாவ் பாலியல் வன்கொடுமையில் சிக்கிய பெண் தீயிட்டு கொளுத்தப்பட்ட விவகாரத்தை சீதையுடன் தொடர்பு படுத்தி மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
மக்களவையில் பேசிய காங்கிரஸ் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, உத்தரப் பிரதேசத்தில் ராமருக்கு கோயில் கட்ட முயற்சி நடக்கும் அதேவேளையில் சீதைகள் எரிக்கப்படுகிறார்கள் என்றார். உன்னாவ் சம்பவத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணை தீவைத்து எரிக்க முயற்சித்த சம்பவம் குறித்துப் பேசிய அவர், உத்தரப் பிரதேசத்தை உத்தம பிரதேசமாக்குவோம் எனக் கூறியவர்கள் அதை அதர்ம பிரதேசமாக்கி இருப்பதாகக் கூறினார். இதற்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உள்ளிட்ட ஆளும் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் தரப்பில் சிலர் பேசியதால் அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது. பின்னர் பேசிய அமைச்சர் ஸ்மிருதி இரானி, பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைகளை மதரீதியாக தொடர்புபடுத்திப் பேசுவது துரதிர்ஷ்டவசமானது என்றார்.
மேற்கு வங்கத்தின் மால்டாவில் இதேபோன்ற கொடுமை நடந்தபோது, எதிர்க்கட்சியினர் வாய்திறக்கவில்லை என்ற அவர், பாலியல் வன்கொடுமை, கொலை, தீவைப்பு ஆகிய பெண்களுக்கு எதிரான மனிதத்தன்மையற்ற குற்றங்களை அனைவரும் ஒரே குரலில் கண்டிக்க வேண்டுமே தவிர, மதரீதியாக பேசக்கூடாது என்றார். அப்போது காங்கிரஸ் எம்பிக்கள் பிரதாபனும், குரியகோசும் ஆவேசமாக குரல் எழுப்பியவாறு அவையின் மையப்பகுதியை நோக்கி முன்னேறினார்.
இதையடுத்து சூழலை கட்டுப்படுத்துவதற்காக அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையில் அமைச்சரை மிரட்டும் வகையில் நடந்து கொண்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக எம்பிக்கள் வலியுறுத்தினர். இதன் பின் வெளியே வந்து பேசிய ஸ்மிருதி இரானி, ஒரு பெண் எம்பி ஆன தான் அவையில் பேசுவது தவறா என கேள்வி எழுப்பினார். எனினும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக எதிர்க்கட்சிகள் மீது குற்றஞ்சாட்டும் செயலில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளதாக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்