உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் அருகே ஃபுல் ராய் பகுதியில், கடந்த 2-ம் தேதி ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆன்மிகச் சொற்பொழிவாளர் போலோ பாபா நடத்திய சொற்பொழிவை கேட்க ஒரே இடத்தில் லட்சக்கணக்கானோர் திரண்டனர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121-க்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், சிறப்புப் புலனாய்வுக் குழுவையும் மாநில அரசு அமைத்தது. அந்தக் குழுவினர், சொற்பொழிவு நிகழ்ச்சியில் பணியில் இருந்த போலீசார், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் வாக்குமூலம் பெற்று 855 பக்கங்களை கொண்ட அறிக்கையை தயாரித்து மாநில அரசிடம் தாக்கல் செய்தனர்.
அதில், ’ஹத்ராஸ் சம்பவத்தின் பின்னணியில் மிகப்பெரிய சதி உள்ளதை மறுக்க முடியாது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும். கூட்ட நெரிசலுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே பொறுப்பு. உள்ளூர் நிர்வாகம், போலீசார் இந்நிகழ்ச்சியை சாதாரணமாக எடுத்துக் கொண்டனர். விசாரணைக்கு சென்ற காவல்துறையினரை அனுமதிக்காமல் தடுத்துள்ளனர்.
நிகழ்ச்சி நடந்தபோது பொதுமக்கள் வெளியேறுவதற்கு போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. நிகழ்சி நடந்த இடத்திற்கு சென்று ஆய்வு செய்யாமலேயே அதிகாரிகள் அனுமதி வழங்கி உள்ளனர்’ எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் அதில், ‘விசாரணை அறிக்கையில் சாமியார் போலே பாபாவின் பெயர் இடம்பெறவில்லை’ என்பது குறிப்பிடத்தக்கது.