தேவாலயத்தில் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட கேரள கன்னியாஸ்திரி லூசி, வாடிகனில் முறையிட்டுள்ளார்.
கேரளாவை சேர்ந்த முன்னாள் பிஷப் ஃபிராங்கோ முல்லக்கல், கன்னியாஸ்திரி ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். முன்னதாக, பிஷப் ஃபிராங்கோவை கைது செய்யக்கோரி கன்னியாஸ்திரிகள் பலர் போராட்டம் நடத்தினர். இதில், கன்னியாஸ்திரி லூசி களப்புராவும் (53) பங்கேற்றார். இதன் காரணமாக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவர் தேவாலயப் பணிகளில் ஈடுபடக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் கேரள அரசு நடத்திய, பெண்கள் சுவர் போராட்டத்துக்கு ஆதரவாக கன்னியாஸ்திரி லூசி, கருத்துத் தெரிவித்திருந்தார். இது மதக்கோட்பாட்டுக்கு எதிரானது என்று திருச்சபை அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
அதில், ’தனியாக கார், வீடு வாங்கி வாழ்ந்து வருகிறீர்கள். இதற்காக வங்கி கடனும் பெற்றுள்ளீர்கள். அனுமதியின்றி புத்தகங்களையும் வெளியிட்டிருக்கிறீர்கள். உடை கட்டுப்பாட்டையும் மீறியுள்ளீர்கள். சமூக வலைத்தளங்கள் மற்றும் மீடியாவில் பேசியும் பத்திரிகைகளில் எழுதியும் வருகிறீர்கள். இது திருச்சபை விதிகளுக்கும் மதக் கோட்பாட்டுக்கும் எதிரானது’ என்று கூறி, விளக்கம் கேட்டது. அதற்கு அவர் விளக்கம் அளித்திருந்தார். அந்த விளக்கம் திருப்திகரமாக இல்லை என்று கூறி, திருச்சபையில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.
இதுதொடர்பாக கன்னியாஸ்திரியின் தாய்க்கு திருச்சபை அனுப்பிய கடிதத்தில், ’’லூசியை சபையில் இருந்து நீக்கிவிட்டோம். கடிதம் கிடைக்கப்பெற்ற 10 நாட்களுக்குள் லூசியை அழைத்து செல்ல வேண்டும்’’ என்று தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் கன்னியாஸ்திரி லூசி, இந்த நீக்கத்துக்கு எதிராக கத்தோலிக்க திருச்சபையின் தலைமை பீடமான, வாடிகன் திருச்சபையில் முறையிட்டுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, ‘’இந்த நீக்கத்துக்கு எதிராக வாடிகன் நிர்வாகத்துக்கு மெயில் அனுப்பியிருக்கிறேன். கடிதமும் அனுப்பி உள்ளேன். டெல்லியில் உள்ள திருச்சபை நிர்வாகத்துக்கும் கடிதம் அனுப்பியிருக்கிறேன். இதனால் இந்த திருச்சபையில் இருந்து என்னை நீக்க முடியாது’’ என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.