முன் டயரில் கோளாறு ஏற்பட்டதை அடுத்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் டெல்லி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
சிங்கப்பூரில் இருந்து டெல்லிக்கு, எஸ்க்யூ 406 என்ற எண் கொண்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானம் வழக்கம் போல நேற்று இரவு, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. விமானத்தில் 238 பயணிகள் இருந்தனர். இரவு 8 மணியளவில் டெல்லி அருகே விமானம் வந்த போது, விமானி சக்கரங்களை கீழே இறக்கினார். ஆனால், விமானத்தின் மூக்குப் பகுதியில் இருக்கும் சக்கரம் கீழிறங்கவில்லை. அதில் கோளாறு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து விமானி, டெல்லி விமான நிலையத்துக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்தார். பரபரப்பானது விமான நிலையம். முன்னெச்சரிக் கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ரன்வே 28-ல் விமானம் தரையிறங்க அனுமதி கொடுக்கப்பட்டது. முதலில் விமானம் தரையிறங்க முற்பட்டபோது முடியாமல், மீண்டும் மேலே சென்றது.
சிறிது நேரத்துக்கு பிறகு 8.20 மணிக்கு விமானம் ஓடுபாதையில் தடுமாற்றத்துடன் இறங்கி நடுவழியில் நின்றது. இதனால் பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். அவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் விமானம், இழுவை வாகனம் மூலம் தனியிடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதன் காரணமாக 18 நிமிடங்கள் தாமதமாக மற்ற விமானங்கள் புறப்பட்டு சென்றன.
இதுபற்றி டெல்லி விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘’ரன் வே 28, விமானம் புறப்பட்டுச் செல்லத்தான் பயன்படுத்தப்படும். ஆனால், எமர்ஜென்சி என்பதால், அந்த ரன்வேயில் தரையிறக்க அனுமதிக்கப்பட்டது. பயணிகளுக்கு எந்த பிரச்னையும் இல்லை’’ என்றார்.