சைமா எனப்படும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் தெலுங்கு திரையுலகில், அதிகளவிலான விருதுகளை அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’ திரைப்படம் குவித்துள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த திரையுலகினை சர்வதேச அளவில் பிரபலப்படுத்தும் வகையில், கடந்த 2012-ம் ஆண்டு துவங்கப்பட்டதுதான் சைமா எனப்படும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் (SIIMA - South Indian International Movie Awards) விழா. தேசிய விருதைப் போன்று, இந்த விருதும் திரையுலகில் பிரபலமான ஒன்று. கடந்த 2021-ம் ஆண்டு வெளியான தென்னிந்திய திரைப்படங்களுக்கான விருதுகள் வழங்கும் விழா கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெறுகிறது. 10-வது ஆண்டு சைமா விருது விழாவில் நேற்று தெலுங்கு மற்றும் கன்னடம் திரையுலகிற்கான விருதுகள் நேற்றிரவு அறிவிக்கப்பட்டன.
இதில், அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’ திரைப்படம் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை குவித்துள்ளது. சிறந்த திரைப்படம் (புஷ்பா), சிறந்த நடிகர் (அல்லு அர்ஜூன்), சிறந்த துணை நடிகர் (ஜெகதீஷ் பிரதாப் பண்டாரி), சிறந்த இயக்குநர் (சுகுமார்), சிறந்த இசையமைப்பாளர் (தேவிஸ்ரீ பிரசாத்), சிறந்த பாடலாசிரியர் (சந்திரபோஸ் - ஸ்ரீவள்ளி பாடல்) உள்ளிட்ட பிரிவுகளில் ‘புஷ்பா’ திரைப்படம் விருதுகளை பெற்றுள்ளது. மேலும் சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ படத்தை தற்போது இயக்கிவரும் இயக்குநர் அனுதீப்பின் தெலுங்கு திரைப்படமான ‘ஜதி ரத்னலு’ திரைப்படமும் 2 விருதுகளை வென்றுள்ளது.
இதேபோல், விஜய் சேதுபதி வில்லனாக தெலுங்கில் அறிமுகமான ‘உப்பெண்ணா’ திரைப்படமும், அறிமுக இயக்குநர் (புச்சி பாபு சனா), சிறந்த அறிமுக நாயகி ( கீர்த்தி ஷெட்டி) ஆகிய பிரிவுகளில் 2 விருதுகளை வென்றுள்ளது. ‘கிராக்’ படத்தில் நடித்த வரலக்ஷமி சரத்குமாருக்கு சிறந்த துணை நடிகைக்கான விருதும், ‘மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருது பூஜா ஹெக்டேவுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் கன்னடத்தில் மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமாருக்கு, சிறந்த நடிகருக்கான விருது ‘யுவரத்னா’ படத்தில் நடித்ததற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் பிரபலமான பாலிவுட் நடிகர் பிரிவில், ரன்வீர் சிங்கிற்கு விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் தென்னிந்தியாவின் யூத் ஐகான் விருது பூஜா ஹெக்டே மற்றும் விஜய் தேவரகொண்டாவுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டுள்ளார். தமிழ் மற்றும் மலையாளம் திரையுலகிற்கான விருதுகள் இன்று வழங்கப்படுகிறன்றன.