சித்து மூஸ் வாலாவின் உடலில் 19 தோட்டாக்கள் பாய்ந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், சுடப்பட்ட 15 நிமிடங்களில் அவர் இறந்துவிட்டதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் மிகவும் பிரபலமான பாடகராக வலம் வந்தவர் சித்து மூஸ் வாலா (28). அண்மையில் நடந்துமுடிந்த பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு காங்கிரசில் இணைந்தார். இந்தச் சூழலில் சித்து மூஸ் வாலா, கடந்த மே 29ஆம் தேதி பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் உள்ள ஜவஹர்கே என்ற இடத்தில் தனது ஜீப்பில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென அவர் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். சுமார் 30க்கும் மேற்பட்ட ரவுண்டுகள் அவரது காரை நோக்கிச் சுடப்பட்டதில், சித்து மூஸ் வாலா படுகாயமடைந்தார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் முன்னரே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் பயணித்த மேலும், இருவர் இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் இப்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான், சித்து மூஸ் வாலாவின் உடல் தகனம் செய்யப்பட்டது. அப்போது பெருந்திரளான ரசிகர்களும், காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களும் அங்குத் திரண்டு இருந்தனர்.
இந்த நிலையில் சித்து மூஸ் வாலாவின் உடலில் 19 தோட்டாக்கள் பாய்ந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், சுடப்பட்ட 15 நிமிடங்களில் அவர் இறந்துவிட்டதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது. சித்து மூஸ் வாலா உடலின் வலது பக்கத்தில் அதிகமான குண்டு காயங்கள் இருந்ததாகவும், சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் மற்றும் முதுகெலும்பில் தோட்டாக்கள் பாய்ந்துள்ளது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குண்டு காயம் ஏற்பட்டதால், இதயம் தனது இயக்கத்தை நிறுத்தி அவரது மரணம் நிகழ்ந்ததாக உடலை ஆராய்ந்த தடயவியல் நிபுணர்கள் எழுதி உள்ளனர். சித்து மூஸ் வாலாவின் உடைகள் முற்றிலும் ரத்தத்தில் நனைந்து காணப்பட்டதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சித்து மூஸ் வாலா கொலைக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது. இதேபோல் கனடாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கோல்டி ப்ரார் கும்பலும் இந்தக் கொலைக்கு பொறுப்பேற்றுள்ளது.
இதையும் படிக்கலாம்: போதையில் சப்பாத்தி கேட்டு தகராறு - லாரி ஏற்றி இருவரை கொலை செய்த உ.பி. ஓட்டுநர்