உச்சத்தில் உட்கட்சி பூசல்: பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் ஆகிறார் சித்து?

உச்சத்தில் உட்கட்சி பூசல்: பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் ஆகிறார் சித்து?
உச்சத்தில் உட்கட்சி பூசல்: பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் ஆகிறார் சித்து?
Published on

காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் மாநிலத் தலைவராக நவ்ஜோத் சிங் சித்துவை நியமிக்க காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமை தீவிர ஆலோசனை செய்து வருகிறது. பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் - சித்து கோஷ்டிகள் இடையே நடந்து வரும் பனிப்போரை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகளை தேசிய தலைமை இறுதி செய்து வருகிறது.

கடந்த சில நாட்களில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி டெல்லியில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியுடன் ஆலோசனைகள் நடத்தியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான கே.சி.வேணுகோபால், ஹரிஷ் ராவத் மற்றும் கமல்நாத் ஆகியோரும் இந்த ஆலோசனைகளில் பங்கேற்றனர். அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆலோசகராக இருந்து வரும் பிரசாந்த் கிஷோரும இந்த ஆலோசனைகளில் கலந்துகொண்டார். பிரசாந்த் கிஷோர் பஞ்சாப் அரசுக்கு ஆலோசகராக அமரிந்தர் சிங் அரசால் நியமிக்கப்பட்டு இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த வருடம் பஞ்சாப் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், உட்கட்சி பூசலை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என கட்சியின் தேசியத் தலைமை முயற்சி செய்து வருகிறது. ஆகவே, அம்ரிந்தர் சிங் தொடர்ந்து முதல்வராக நீடிப்பார் என்றும், அதேசமயத்தில் சித்து கட்சியின் பஞ்சாப் பிரிவு தலைவராக நியமிக்கப்படுவார் எனவும் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது கட்சியின் பஞ்சாப் மாநில தலைவராக உள்ள சுனில் ஜாக்கர் விரைவில் துணை முதல்வராக நியமிக்கப்படலாம் எனவும் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கருதுகிறார்கள்.

பஞ்சாப் மாநிலத்தில் 2 துணை முதல்வர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும், அதில் ஒருவர் தலித் பிரதிநிதியாக இருப்பார் என்றும் அவர்கள் கட்சியில் நடந்துவரும் ஆலோசனைகள் மூலம் கணித்துள்ளார்கள்.

சித்துவின் கோரிக்கையை ஏற்று அம்ரிந்தர் சிங் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படும் என்றும், அதிக குற்றச்சாட்டுகளை சந்தித்துவரும் இரண்டு அமைச்சர்கள் ராஜினாமா செய்ய கட்சியின் தேசிய தலைமை அறிவுறுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சித்து காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் மாநிலத் தலைவரானால், அத்துடன் இரண்டு துணைத் தலைவர்களை நியமிக்க வேண்டும் என அம்ரிந்தர் சிங் கோஷ்டி வலியுறுத்தி வருகிறது. அடுத்த வருட சட்டப்பேரவைத் தேர்தலில் அம்ரிந்தர் சிங் தலைமையிலேயே காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்றும், சித்து கட்சியின் மாநில பிரிவில் முக்கிய பங்காற்றுவார் எனவும் கட்சித் தலைவர்கள் கருதுகிறார்கள்.

விரைவில் உட்கட்சி பூசல் முடிவுக்கு வந்தால் மட்டுமே சட்டப்பேரவைத் தேர்தலில் வலுவாக களமிறங்க முடியும் என அறிந்த கட்சியின் தேசிய தலைமை, முக்கிய முடிவுகளை விரைவில் அறிவிக்கும் என பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

- கணபதி சுப்பிரமணியம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com