நாடு முழுவதும் இரண்டாவது நாளாக இன்றும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறவிருக்கும் நிலையில், டெல்லியில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 52 பேருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டது.
கொரோனாவை விரட்டி அடிப்பதற்காக நாடு முழுவதும் முதற்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று தொடங்கியது. தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் தடுப்பூசி பணி நடைபெறுகிறது.
இந்தச் சூழலில், டெல்லியில் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களில் 52 பேருக்கு உடல் இறுக்கம், மயக்கம், தோல் அரிப்பு உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. சிறிது நேர மருத்துவ கண்காணிப்புக்குப் பின் பெரும்பாலோனார் வீடு திரும்பி விட்டனர்.
அதேபோல, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை பாதுகாவலர் ஒருவருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட 20 நிமிடங்களில் ஒவ்வாமை ஏற்பட்டது. உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்த மருத்துவர்கள், தொடர்ந்து அவரது உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கொல்கத்தாவிலும் 35 வயது மதிக்கத்தக்க செவிலியர் ஒருவர் தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னர் மயக்கமடைந்தார்.