பீகார் மாநிலம் சிதமார்ஹி மாவட்டத்தில் இந்திய-நேபாள எல்லையில் நேபாள காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு, 2 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்தியாவும் நேபாளமும் 1,850 கிலோ மீட்டர் திறந்த எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன. அப்பகுதிக்குச் சென்று பணியாற்றி விட்டுத் திரும்புவதும் குடும்பம் தொடர்பாக அங்குச் செல்வதும் மிகவும் வழக்கமான ஒன்றாகப் பார்க்கப்படும். இந்தப் பகுதி எல்லையில் இருப்பவர்களுக்கும் அந்தப் பகுதியில் எல்லையில் இருப்பவர்களுக்கும் இடையே திருமண உறவுகளும் உண்டு. இதுவரை துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நிகழாத நிலையில், இப்போது நடந்திருக்கிறது.
இது தொடர்பாகக் கிராமவாசிகள் கூறும்போது லால்பந்தி-ஜான்கி நகர் எல்லைப் பகுதியில் விவசாய நிலத்தில் வேலை செய்து வந்தவர்களிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானதாகக் கூறப்படுகிறது. சிதமார்ஹி காவல்துறை கண்காணிப்பாளர் அனில் குமார் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் " இந்தச் சம்பவத்துக்கும் இந்திய-நேபாள நாட்டுக்கிடையேயான சமீபத்திய எல்லைப் பிரச்சினைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை" எனக் கூறியுள்ளார்.