உயிரைவிட அந்த bagதான் முக்கியமா? ஓடும் ரயில்முன் தாவிய பெண்... திக் திக் நொடிகள்!
ரயில்வே ட்ராக்கை கடக்க முயலும் பலரும் மரணத்தை தழுவதும், மரணத்திலிருந்து தவறுவதுமான சம்பவங்கள் பலவற்றை பார்த்திருப்போம். அதில் இரண்டாவது ரகம் குறித்துதான் தற்போது பார்க்கப் போகிறோம்.
ஐ.ஏ.எஸ். அதிகாரி அவானிஷ் ஷரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோதான் நெட்டிசன்களை அலறவிட்டிருக்கிறது.
அந்த வீடியோவில், இரட்டை தண்டவாளம் உள்ள நடைமேடை இல்லாத இடத்தில் ரயில் ஒன்று நடு வழியில் நின்றுக்கொண்டிருக்க, அதிலிருந்து பயணிகள் சிலர் தங்களது குடும்பத்தோடு இறங்கி பக்கவாட்டில் இருக்கும் ட்ராக்கை கடக்க முயற்சிக்கிறார்கள்.
அதில் சிலர் தண்டவாளத்திற்கு அப்பாலும், சிலர் நின்றுக் கொண்டிருந்த ரயிலுக்கு அருகேவும் மாறி மாறி செல்கிறார்கள். ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடன் வந்த அனைவரையும் எதிர்ப்பக்கத்தில் விடும்போது ரயிலுக்கருகே தனது பையை தவற விட்டிருக்கிறார்.
அதே சமயத்தில் காலியாக இருந்த தண்டவாளம் வழியாக எதிரே ஒரு விரைவு ரயில் வரவே நொடிப்பொழுதில் அந்த ட்ராக்கை கடக்கிறார். அந்த ஒரு நொடியில் சிறிது பிசகியிருந்தாலும் அப்பெண் உட்பட பலருமே மரணத்தை சந்தித்திருப்பார்கள்.
இந்த வீடியோவை பகிர்ந்த IAS அதிகாரி அவானிஷ், “வாழ்க்கை உங்களுடையது.. அப்போது முடிவும் உங்களுடையதுதான்” என அதிருப்தியாகவும், காட்டமாகவும் குறிப்பிட்டுள்ளார். 2 லட்சத்துக்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்ட இந்த வீடியோ பதிவில் பலரும் தங்களது கண்டனங்களை அந்த மக்களுக்கு தெரிவித்திருக்கிறார்கள்.
இப்படியான பொறுப்பற்ற செயலை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். மேலும், ஒரே ஒரு பையை எடுக்கவா இப்படி ஓடும் ரயில் முன் தாவ வேண்டும் எனவும் தத்தம் வருத்தங்களையும் கூறியுள்ளார்கள்.