தெலங்கானாவில் சத்ரபதி சிலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் மீது டிஆர்எஸ் தொண்டர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதால் இரு கட்சியினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.
தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு தனிப்பெரும் கட்சியாக விளங்கி வந்த டிஆர்எஸ்-க்கு மாற்று சக்தியாக தற்போது பாஜக உருவெடுத்து வருகிறது. இதனிடையே, தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள போதான் பகுதியில் பாஜக சார்பில் அண்மையில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் உருவச்சிலை அமைக்கப்பட்டது. இந்த சிலையை அப்பகுதி பாஜக எம்.பி. அர்விந்த் தர்மபுரி இன்று திறந்து வைப்பதாக இருந்தது.
இந்நிலையில், இதற்கான ஏற்பாடுகளை பாஜகவினர் செய்து கொண்டிருந்த போது, அங்கு வந்த டிஆர்எஸ் தொண்டர்கள் அதனை தடுத்து நிறுத்த முயன்றனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியது. பாஜகவினர் மீது டிஆர்எஸ் தொண்டர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதில் பலர் காயமடைந்தனர். டிஆர்எஸ் தொண்டர்களுடன் அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தொண்டர்களும் சேர்ந்து தாக்குதல் நடத்தியாக கூறப்படுகிறது. பாஜகவினரும் அங்கு திரண்டு வந்து பதில் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தால் அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது. அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக போதான் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.