ராகுல்காந்தி மக்களை கவரக்கூடிய தலைவர் இல்லை என சிவசேனா விமர்சித்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்துள்ளது. நாடு முழுவதும் அந்தக் கட்சி வெறும் 52 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியுள்ளது. வயநாடு தொகுதியில் முதல்முறையாக போட்டியிட்ட ராகுல் காந்தி வெற்றி பெற்றார் என்றாலும், தனது சொந்த தொகுதியான அமேதியில் தோல்வியைச் சந்தித்தார். ஆளும் மாநிலங்களான மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகியவற்றிலும் காங்கிரஸ் தோல்வியடைந்துள்ளது.
இந்நிலையில், ராகுல்காந்தி மக்களை கவரக்கூடிய தலைவர் இல்லை என சிவசேனா விமர்சித்துள்ளது. இதுகுறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாமனாவில், “2014ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பெற்ற தோல்வியைக் காட்டிலும் மிக மோசமான தோல்வியை இந்த முறை காங்கிரஸ் பெற்றுள்ளது.
ராகுல் காந்தியின் ஆளுமை வாக்காளர்களைக் கவரவில்லை என்பதே காரணம். ராகுல் காந்தியின் பேச்சுகள் மக்களை கவர்ந்திழுக்கும் வகையில் இல்லை. ராகுல்காந்தி யாருக்கும் முன்மாதிரியாக இருப்பதில்லை. காங்கிரஸ் கட்சி தொண்டர்களை இழந்து வருகிறது. கிழக்கு உத்தர பிரதேசத்தின் பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தியை நியமித்த போதும், அங்கு எந்த மாற்றமும் ஏற்படவில்லை. கடந்த முறையை விட ஒரு தொகுதி குறைவாகத்தான் காங்கிரஸ் தற்போது பெற்றுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.