மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியின் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கிய நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக உத்தவ் தாக்கரே அணி ஆலோசனை நடத்தியது.
மகாராஷ்டிராவில் முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தலைமையில் ஓர் அணியும், தற்போதைய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஓர் அணியுமாக சிவசேனா கட்சி பிரிந்து இயங்கி வருகிறது. இருவரும் தாங்களே உண்மையான சிவசேனா என கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர்.
இந்தச் சூழலில், அந்தேரி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட கட்சி சின்னத்தை தங்களுக்கே ஒதுக்கக்கோரி இருதரப்பும் தலைமை தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டிருந்தன. இதனை பரிசீலித்த தேர்தல் ஆணையம் சிவசேனாவின் வில் அம்பு சின்னத்தை தற்காலிகமாக முடக்கியது.
இதன் காரணமாக தேர்தலில் போட்டியிடுவது, கட்சி சின்னம் ஆகியவற்றை முடிவு செய்ய உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அணி அவசர ஆலோசனை நடத்தியது. அதில், டார்ச், திரிசூலம், உதயசூரியன் ஆகிய சின்னங்களில் ஏதேனும் ஒன்றைக் கேட்டுப் பெற முடிவெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சூழலில், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியும் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளது.