சிவசேனா தலைமை அலுவலகம் முன்பு அனுமன் பிரார்த்தனைகளை ஒலிப்பெருக்கியில் ஒலிபரப்பியதற்காக மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மைத்துனரான ராஜ் தாக்கரே, மகாராராஷ்டிரா நவ நிர்மான் சேனா என்ற கட்சியை நடத்தி வருகிறார். இரண்டு கட்சிகளும் இந்துத்துவா கொள்கையின் அடிப்படையிலானது என்றாலும் அவர்கள் இருவருக்குள்ளும் அரசியல் ரீதியாக நீண்டகாலமாக பகை இருந்து வருகிறது. இதன் காரணமாக, அவர்களின் கட்சி தொண்டர்கள் இடையேயேயும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்.
இந்நிலையில், கடந்த வாரம் மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனா கட்சியின் தலைவரான ராஜ் தாக்கரே ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில், "இந்துத்துவா கொள்கையை பேசி வரும் சிவசேனா, தற்போது அந்த சித்தாந்தத்தில் இருந்து விலகி விட்டது. இஸ்லாமியர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. மசூதிகளில் ஒலிப்பெருக்கி மூலம் தினமும் பல முறை பாங்கு மிக சத்தமாக ஒலிபரப்படுகிறது. இதனால் இந்துக்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து பல முறை புகார் தெரிவித்தும் சிவசேனா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க தயங்குகிறது. மக்களுக்கு இடையூறாக இருக்கும் மசூதி ஒலிப்பெருக்கிகளை நிசப்தமாக்க வேண்டும். அவ்வாறு செய்ய தவறினால், மசூதிகளுக்கு வெளியே அனுமன் பிரார்த்தனைகளை மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியினர் ஒலிப்பெருக்கி மூலம் ஒலிபரப்புவார்கள்" என ராஜ் தாக்கரே கூறியிருந்தார்.
அதன்படி, முதல்கட்டமாக, நவநிர்மான் சேனா கட்சியினர் மும்பையில் உள்ள சிவசேனா தலைமை அலுவலகம் முன்பு ஒலிப்பெருக்கிகள் மூலம் இன்று அனுமன் பிரார்த்தனைகளை ஒலிபரப்பினர். இதையடுத்து, அந்தக் கட்சியை சேர்ந்த 4 பேரை போலீஸார் கைது செய்தனர். இதுகுறித்து மகாராஷ்டிரா அமைச்சர் ஆதித்யா தாக்கரே கூறுகையில், "சிவசேனாவின் இந்துத்துவா கொள்கை எப்படிப்பட்டது என்பது மகாராஷ்டிரா மக்களுக்கு தெரியும். அதனை யாருக்கும் நாங்கள் நிரூபிக்க வேண்டியது கிடையாது. இறந்துபோன கட்சியை உயிர்ப்பிப்பதற்காக ராஜ் தாக்கரே இதுபோன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். அவரை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது" என அவர் கூறினார்.