84 வயதான ஒரு மனிதனைப் பார்த்து பயந்த அரசாங்கம் அவரை சர்வாதிகாரத்துடன் அணுகி கொலை செய்தது. இது ஹிட்லர், முசோலினி செய்த செயல்களுக்கு சமமானது என்று சிவசேனா கட்சியின் எம்பி சஞ்சய் ராவத் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக சிவசேனா கட்சியின் பத்திரிகையான சமனாவில் சஞ்சய் ராவத் எழுதியிருக்கும் கட்டுரையில், “பழங்குடிகள் உரிமை செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி சிறையில் கொல்லப்பட்டார். 84 வயதான ஒரு நபரால் நரேந்திர மோடியின் அரசாங்கத்தை கவிழ்க்கக்கூடிய அளவுக்கு நாட்டின் அஸ்திவாரங்கள் மிகவும் பலவீனமாக இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பினார்
இது தொடர்பாக எழுதியிருக்கும் சஞ்சய் ராவத், “இந்திரா காந்தி ஜார்ஜ் பெர்னாண்டஸைப் பார்த்து பயந்தார். ஜார்ஜ் அப்போது ஒரு இளம் தலைவராக இருந்தார், தந்தை ஸ்டேன் சுவாமியைப் போல வயதானவராக வில்லை. ஆனால் இன்றைய அரசாங்கம் 84 வயதுடைய ஸ்டேன் சுவாமி மற்றும் வரவர ராவ் போன்றோரை பார்த்து பயப்படுகிறது, இதனால்தான் சிறையில் ஸ்டேன் சுவாமி கொல்லப்பட்டார்.
84 வயதான மனிதருக்கு பயந்த மோடி அரசாங்கத்தின் அணுகுமுறை சர்வாதிகாரமானது, ஹிட்லர் மற்றும் முசோலினி போன்றோரின் செயல்களுக்கு ஒப்பானது. காடுகளில் உள்ள பழங்குடியின மக்களைப்பற்றியும் அவர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரம் குறித்து அறிந்திருப்பது ஒரு நாட்டை கவிழ்க்கும் செயலா? எப்படி பார்த்தாலும் 84 வயதான உடல் நலிவுற்ற ஸ்டேன் சுவாமியின் மரணத்தை நியாயப்படுத்த முடியாது" என தெரிவித்தார்.
அக்டோபரில் எல்கார் பரிஷத் வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்ட ஸ்டேன் சுவாமி, ஜூலை 5 ஆம் தேதி நீதிமன்ற காவலில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றநிலையில் மரணமடைந்தார். இதற்கு இந்தியாவின் பல்வேறு கட்சி தலைவர்கள் மற்றும் உலகின் பல சமூக செயற்பாட்டாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.