’அவுரங்காபாத் பெயரையும் மாத்தணும்’: சிவசேனா

’அவுரங்காபாத் பெயரையும் மாத்தணும்’: சிவசேனா
’அவுரங்காபாத் பெயரையும் மாத்தணும்’: சிவசேனா
Published on

மகாராஷ்ரா மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத், ஓஸ்மனாபாத் நகரங்களின் பெயர்களையும் மாற்ற வேண்டும் என்று சிவசேனா கட்சி கோரிக்கை வைத்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத் நகரம், 'பிரயாக் ராஜ்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து அங்குள்ள பைசாபாத் மாவட்டத்தின் பெயர் ’அயோத்யா’ என மாற்றப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். அவர் அறிவித்த சில மணி நேரங்களிலேயே குஜராத் துணை முதலமைச்சர் நிதின் படேல், அகமதாபாத் நகரத்தின் பெயரை கர்ணாவதி என்று மாற்றுவது பற்றித் தெரிவித்துள்ளார்.

(மனிஷா கயாண்டே)

செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’ மக்கள், அகமதாபாத்தின் பெயரை கர்ணாவதி என மாற்ற வேண்டும் என்று விரும்புகின்றனர். இதற்கு போதுமான ஆதரவு கிடைத்தால், சட்ட பிரச்னைகள் நீங்குமானால் பெயரை மாற்ற அரசு தயாராக உள்ளது’ என்றார்.

இந்நிலையில் சிவசேனா கட்சி, மகாராஷ்ட்ர மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் நகரின் பெயரை சம்பாஜி நகர் என்றும் ஓஸ்மனாபாத் மாவட்டத்தின் பெயரை தாராசிவ் என்றும்  மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது. 

யோகி ஆத்யநாத் அலகாபாத் நகரின் பெயரை மாற்றுவதாக அறிவித்த அன்று, சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத், ’மகாராஷ்ட்ரா அரசு, அவுரங்காபாத் மற்றும் ஓஸ்மனாபாத் பெயரை எப்போது மாற்றும்?’ என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில் சிவசேனா செய்தி தொடர்பாளர் மனிஷா கயாண்டே நேற்று கூறும்போது, ‘அவுரங்காபாத் மற்றும் ஓஸ்மனாபாத் நகரங்களின் பெயரை மாற்ற வேண்டும் என்று நாங்கள் புதிதாக கோரிக்கை வைக்கவில்லை.

எங்கள் தலைவர் மறைந்த பால் தாக்கரே, 1988 ஆம் ஆண்டில் இருந்தே இந்த கோரிக்கையை வைத்து வந்தார். 1995 ஆம் ஆண்டு, அவுரங்காபாத் மாநகராட்சி இந்த தீர்மானத்தை நிறைவேற்றி மாநில அரசுக்கு அனுப்பி வைத்தது. ஆனால் காங்கிரஸ் கட்சியும் தேசியவாத காங்கிரஸ் கட்சியும், முஸ்லீம்களின் வாக்குகளை பெறுவதற்காக அதை எதிர்த்தது’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com