முதலாளியிடமிருந்து தப்பிக்க ஆறாவது மாடியிலிருந்து குதித்த தமிழ்ப்பெண் - கேரளாவில் துயரம்

முதலாளியிடமிருந்து தப்பிக்க ஆறாவது மாடியிலிருந்து குதித்த தமிழ்ப்பெண் - கேரளாவில் துயரம்
முதலாளியிடமிருந்து தப்பிக்க ஆறாவது மாடியிலிருந்து குதித்த தமிழ்ப்பெண் - கேரளாவில் துயரம்
Published on

கேரள மாநிலம் கொச்சியில் 55 வயது தமிழ் பெண் ஒருவர் வேலைக்குச் சென்ற இடத்தில் மர்மமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் சேலத்தை பூர்வீகமாகக் கொண்டவர் புஷ்பா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 55 வயதான இவர் கேரள மாநிலம் கொச்சி மரைன் டிரைவ் அருகே உள்ள லிங்க் ஹொரைஸனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வழக்கறிஞர் இம்தியாஸ் அகமது என்பவரின் வீட்டில் பணிப் பெண்ணாக வேலைக்குச் சேர்ந்தார். இவர் வேலைக்குச் சேர்ந்தது நவம்பர் 28 ம் தேதி. சில நாட்கள் அந்த வீட்டில் அவர் பணிபுரிந்த நிலையில் புஷ்பாவின் வீட்டுக்கு டிசம்பர் 5 ஆம் தேதி இரவு அபார்ட்மென்ட் உரிமையாளரிடமிருந்து போன் வந்துள்ளது. போனில் பேசியவர்கள், ``புஷ்பா பால்கனியில் இருந்து கீழே விழுந்துவிட்டார். தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்" என்று தகவல் சொல்லியிருக்கிறார்கள்.

உடனடியாக கேரளா விரைந்த குடும்பத்தினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தான் வேலை பார்த்து வந்த வீட்டில் புஷ்பா சித்ரவதைகளை அனுபவித்து வந்த விஷயமும், வீட்டு உரிமையாளர் புஷ்பாவை அடைத்து வைத்திருந்ததும், அதில் இருந்து தப்பிப்பதற்காக கட்டிடத்தின் ஆறாவது மாடியில் இருந்து இரண்டு சேலைகளை கட்டி இறங்கும் போது கீழே தவறி விழுந்த தகவலும் தெரியவந்தது.

ஆரம்பத்தில் அவர் எர்ணாகுளத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், பின்னர் ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் அடுத்த சில நாட்களில் அந்த பெண் மருத்துவமனையில் உயிரிழந்தார். இறந்த புஷ்பாவின் கணவருக்கு கண் பார்வை இல்லை. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இதற்கிடையே, தற்போது புஷ்பாவின் இறப்பில் மர்மம் உள்ளதாக அவரின் கணவர் உட்பட குடும்பத்தினர் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். இதுதொடர்பாக நியூஸ் மினிட் தளத்துக்கு பேட்டியளித்துள்ள புஷ்பாவின் சகோதரர், “நவம்பர் 28 ம் தேதி வேலைக்குச் சேர்ந்தார். சேர்ந்த இரண்டே நாளில் அங்கு வேலை செய்ய முடியாது என்று கணவனிடம் கூறினார் புஷ்பா.

வேலை மிகவும் கடினமாக இருக்கிறது என்றும் அவர்கள் தன்னை சித்திரவதை செய்கிறார்கள் என்றும் போனில் அழுதாள். இதனால் கணவர் ஸ்ரீனிவாஸ் புஷ்பாவை ஊருக்கே திரும்ப வரும்படி அழைத்தார். ஆனால், வீட்டு உரிமையாளர்கள் அவளை வெளியேற அனுமதிக்கவில்லை. அவர்கள் அவளை வெளியே விடாமல் அறையில் அடைத்து வைத்தார்கள். புஷ்பா கீழே விழுந்த தகவல் டிசம்பர் 5ம் தேதி இரவு 10 மணியளவில் தான் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்" என்று கூறியுள்ளார்.

இந்த விவகாரத்தில் புஷ்பாவின் கணவர் ஸ்ரீனிவாசன் நேற்று கேரளாவில் செய்தியாளர்களைச் சந்திக்கும்போது, “எனக்கு கண் பார்வை கிடையாது. என் மனைவி வேலை பார்த்த வீட்டின் உரிமையாளர் வழக்கறிஞர் இம்தியாஸால் அச்சுறுத்தப்பட்டேன். போலீஸில் புகார் கொடுக்க வேண்டாம் என என்னை மிரட்டினார். பணம் தருவதாகவும் ஆசை காட்டினார். ஒரு வெள்ளை பேப்பரில் வலுக்கட்டாயமாக என் கட்டைவிரலை பிடித்து கைநாட்டு வாங்கிக்கொண்டார்" என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

வழக்கறிஞர் இம்தியாஸ் மீது பிரிவுகள் 342 (தவறான சிறைக்கு தண்டனை) மற்றும் 338 (உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதன் மூலமோ அல்லது மற்றவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பிற்கோ கடுமையான காயத்தை ஏற்படுத்துகின்றனர்) மற்றும் 370 இன் (நபர்களைக் கடத்தல்) கீழ் ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து இம்தியாஸிடம் கேரள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரள மகளிர் ஆணைய அதிகாரிகள் புஷ்பா இறந்த வீட்டை பார்வையிட்டனர். அவர்களும், “உண்மையை அறிய இந்த வழக்கில் மறு விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த வழக்கு மர்மமானது. இதற்கு முன்பே, பிளாட் உரிமையாளர் 14 வயது குழந்தையை வேலைக்கு அமர்த்தி, சிறுமியிடம் கொடூரமாக நடந்து கொண்டார். ஆனால் காவல்துறை அவருக்கு எதிராக அற்பமான பிரிவுகளை மட்டுமே சுமத்தியது" என்று கூறியுள்ளனர். இந்த விவகாரம் கேரளாவில் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.

Courtesy - The News Minute

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com