காங். தலைவர் பதவிக்கு மூத்த தலைவர் திக் விஜய் சிங் போட்டி - சசிதரூரின் சர்ப்ரைஸ் பதிவு!

காங். தலைவர் பதவிக்கு மூத்த தலைவர் திக் விஜய் சிங் போட்டி - சசிதரூரின் சர்ப்ரைஸ் பதிவு!
காங். தலைவர் பதவிக்கு மூத்த தலைவர் திக் விஜய் சிங் போட்டி - சசிதரூரின் சர்ப்ரைஸ் பதிவு!
Published on

வருகிற 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் காங்கிரஸ் கட்சி புதிய தலைவரை தேர்வு செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த தேர்தலில் இதுவரை யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில் கேரளாவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் மட்டும் நாளை வேட்பு மனு தாக்கல் செய்வது உறுதியாக உள்ளது. ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்த நிலையில் அவருக்கு பதிலாக இந்தத் தேர்தலில் மூத்த தலைவரான திக்விஜய் சிங் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

இதற்காக வேட்பு மனு வாங்க இன்று காலை காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வந்த திக்விஜய் சிங், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலில் தான் போட்டியிட இருப்பதாகவும், நாளை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய இருப்பதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்து வேட்பு மனுவை வாங்கிச்சென்றார். இதனால் இந்தத் தேர்தலில் அசோக் கெலாட் போட்டியிட மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக நேரு குடும்பத்தில் இருந்து யாரும் போட்டியிடவில்லை என தெரிவித்த நிலையில் சோனியா காந்தியின் தேர்வாக இருந்தவர் தான் அசோக் கெலாட்.

ஆனால் தனது முதல்வர் பதவியை அவர் ராஜினாமா செய்ய மறுத்த நிலையில் சோனியா காந்தியின் தற்போதைய தேர்வு திக்விஜய் சிங். இதனால் சசிதரூர் மற்றும் திக் விஜய் சிங் இடையே தற்போது நேரடிப் போட்டி உருவாகியுள்ள நிலையில் சோனியா குடும்பத்தின் ஆதரவு திக்விஜய் சிங்க்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேட்பு மனுவை பெற்றப் பிறகு திக் விஜய் சிங், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு சசிதரூரை சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்த சசிதரூர் இது தொடர்பாக பதிவிட்டுள்ள பதிவில், காங்கிரஸ் தலைவர் பதவிக்கான திக்விஜய் சிங்கின் வேட்பு மனுவை நான் வரவேற்கிறேன். எங்களுடையது போட்டியல்ல சக ஊழியர்களிடையே நட்பு ரீதியாக நடைபெறும் ஒரு போட்டி என்பதை நாங்கள் இருவரும் ஒப்புக்கொண்டோம். நாங்கள் விரும்புவது யார் வெற்றி பெற்றாலும் காங்கிரஸ் வெல்லும் என பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதாக முன்னர் அறிவித்திருந்த ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் அம்மாநிலத்தில் நிலவிய அரசியல் குழப்பம் காரணமாகவும், சோனியாகாந்தியின் உத்தரவுப்படியும் இந்தத் தலைவர் போட்டியிலிருந்து விலகி உள்ளார். இதனால் தலைவர் தேர்தலில் திக்விஜய் சிங் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு 90 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த திக்விஜய் சிங் ம.பி. மாநில முதல்வராக இரண்டு முறை பதவி வகித்தவர். மேலும் முன்னாள் மத்திய அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com