டெல்லி வன்முறை: சசி தரூர், 6 பத்திரிகையாளர்கள் மீது உ.பி-யில் தேசத் துரோக வழக்கு

டெல்லி வன்முறை: சசி தரூர், 6 பத்திரிகையாளர்கள் மீது உ.பி-யில் தேசத் துரோக வழக்கு
டெல்லி வன்முறை: சசி தரூர், 6 பத்திரிகையாளர்கள் மீது உ.பி-யில் தேசத் துரோக வழக்கு
Published on

டெல்லி வன்முறை தொடர்பாக வதந்திகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக, காங்கிரஸ் எம்.பி சசி தரூர் மற்றும் பத்திரிகையாளர்கள் 6 பேர் மீது உத்தரப் பிரதேசத்தில் தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர். இதில் ஈடுபட்டிருந்த சுமார் 41 அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் 11 சுற்று பேச்சுவார்த்தைகளை மத்திய அரசு நடத்தியது. ஆனால் அவை பலனளிக்காததால் போராட்டம் நீடித்து வருகிறது.

இந்தப் போராட்டத்தை தீவிரப்படுத்தும் நோக்கில் விவசாயிகள் குடியரசு தினத்தன்று டெல்லியில் மாபெரும் டிராக்டர் பேரணியை நடத்தினர். நாடு முழுவதிலும் இருந்து சுமார் 1 லட்சம் டிராக்டர்களில் லட்சக்கணக்கான விவசாயிகள் பேரணியாக டெல்லிக்குள் நுழைந்தனர். அப்போது காவல்துறைக்கும் விவசாயிக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக உருவெடுத்தது. விவசாயிகள், போலீசார் தரப்பில் பலர் காயமடைந்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் விவசாயிகளை அடித்து விரட்டினர். இதன்பின்னர் விவசாயிகள் மீண்டும் தங்களது பழைய போராட்ட களத்திற்கு திரும்பினர்.

இந்நிலையில், விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் நடைபெற்ற வன்முறையில், விவசாயி ஒருவர் உயிரிழந்தது குறித்து வதந்திகளை வெளியிட்டதாக, காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசி தரூர், பத்திரிகையாளர்கள் மிருனல் பாண்டே, ராஜ்தீப் சர்தேசாய், வினோத் ஜோஸ், ஜாபர் ஆகா, பரேஷ் நாத், ஆனந்த் நாத் ஆகியோர் மீது உத்தரப் பிரதேசம் மாநிலம் நொய்டாவில் உள்ள ஒரு காவல்நிலையத்தில் தேசத் துரோகம், குற்றச் சதி மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் பகைமையை ஊக்குவித்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

டெல்லியில் நடந்த சம்பவத்துக்கு உத்திரப் பிரதேச மாநிலத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. டெல்லிக்கு அருகிலுள்ள நகரத்தில் வசிப்பவர் அளித்த புகாரின் பேரில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com