தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகப் போவதாக சரத்பவார் நேற்று அறிவித்திருந்தார். இது அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நேற்று மும்பையில் நடைபெற்ற அவரது சுயசரிதை வெளியிட்டு விழாவில் இதனை அறிவித்திருந்தார் சரத்பவார். அப்போது பேசிய அவர், “அடுத்து வரும் புதிய தலைமுறையினர் கட்சிக்கு வழிகாட்ட வேண்டிய நேரம் இது. தலைவர் பதவியை தேர்ந்தெடுப்பது குறித்து கட்சியின் செயற்குழு முடிவெடுக்க வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன்” என்று கூறியிருந்தார்.
சரத்பவார் 1958 இல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநில முதல்வராக மூன்று முறை பதவி வகித்த இவர், காங்கிரஸ் கட்சியின் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். மேலும் மத்திய பாதுகாப்புத் துறை மற்றும் வேளாண்துறை அமைச்சராகவும் சரத்பவார் பதவி வகித்துள்ளார். கடந்த 1999 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி தேசியவாத காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார்.
தனி கட்சியை தொடங்கினாலும், தொடர்ந்து காங்கிரஸ் கட்சியுடன் தன் பயணத்தை தொடர்ந்தார். மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணியை முறித்து, பாஜக அல்லாத காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் - சிவசேனா கூட்டணி ஆட்சியை அமைக்க முக்கிய பங்கு வகித்தவர் சரத்பவார். இதனால் 2019ல் தேசிய அளவில் சரத்பவார் குறித்து பேசப்பட்டது.
இதற்கிடையே சமீபத்தில், சரத்பவாரின் மருமகன் அஜித் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 53 சட்டமன்ற உறுப்பினர்களில், 40 சட்டமன்ற உறுப்பினர்களுடன் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இது யூகம் மட்டுமே எனவும், இது உண்மை இல்லை எனவும் சரத்பவார் விளக்கமளித்தார்.
இந்நிலையில்தான், நேற்று திடீரென தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சரத்பவார் அறிவித்துள்ளார்.
இந்த ஆண்டு இறுதியில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இரு தினங்களுக்கு முன்னதாக அரசியல் வியூகர் பிரசாந்த் கிஷோரை நேரில் அழைத்த சரத்பவார், அவருடன் மூன்று மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தியிருந்தார். இதைத் தொடர்ந்தே தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் அவர். ஆகவே இரண்டுக்கும் தொடர்பிருக்குமோ என்ற நோக்கத்திலும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதேநேரம், மாநில தேர்தலை மனதில் வைத்து இம்முடிவை சரத்பவாரே எடுத்தாரா என்றும் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.
சரத்பவாரின் இந்த முடிவு அக்கட்சியின் தொண்டர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ள நிலையில், முடிவை திரும்பப் பெற வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்க கட்சியின் மூத்த உறுப்பினர்களான சுப்பிரியா சுலே, அஜித் பவார், ஜெயந்த் பாட்டில், அணில் தேஷ்முத் உள்ளிட்டோர் அடங்கிய குழு ஒன்றும் அமைக்கப்படுகிறது என்று சரத்பவார் தெரிவித்துள்ளார்.