மூளைவாதத்தால் பாதிக்கப்பட்ட மாணவியை சில பள்ளிகள் புறக்கணித்த போதும் அவர் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 90.4% மதிப்பெண்கள் பெற்று அனைவரும் உறைய வைத்துள்ளார்.
மும்பையை சேர்ந்த மாணவி மம்தா நாயக்(17). இவர் மூளைவாத நோயால் பாதிக்கப்பட்டவர். அதனால் அவரால் அனைவரையும் போன்று எளிதில் நடக்க முடியாது. அத்துடன் அவரால் தெளிவாக பேச முடியாது. இவரின் இந்த நிலையால் மும்பை நகரிலுள்ள பல பள்ளிகள் இவரை சேர்த்துக்கொள்ள மறுத்தது. இதனை பொருட்படுத்தாது அந்த மாணவி ஒரு பள்ளி கொடுத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தி சாதித்து காட்டியுள்ளார்.
இவருக்கு கணித பாடத்தில் தேர்வு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. மற்ற பாடங்களில் அவருக்கு ஒப்பிக்கும் முறையில் தேர்வு நடத்தப்பட்டது. இதில் சிறப்பாக செயல்பட்ட மாணவி மம்தா 500க்கு 452 மதிப்பெண்கள் எடுத்தார். பத்தாம் வகுப்பில் மொத்தமாக 90.4% மதிப்பெண்கள் எடுத்து பலருக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறார்.
இதுகுறித்து மம்தாவின் தாய் ரூபாலி, “என் மகளின் வெற்றிக்கு பள்ளி நிர்வாகம் மற்றும் என்னுடைய உறவினர்கள் ஆகிய அனைவருக்கும் நன்றி சொல்லவேண்டும். என் மகளுடன் நானும் தினமும் பள்ளிக்கு சென்று அங்கு நடத்தப்படும் பாடங்களை கேட்பேன். பின்னர் மம்தாவிற்கு வீட்டில் அதைக் கற்றுக்கொடுப்பேன். மம்தாவிற்கு மூளை பாதிப்பு இருந்தாலும் அவளுக்கு நல்ல ஞாபக சக்தி உண்டு. இதனை வைத்து அவள் நன்றாக படித்தாள். 11ஆம் வகுப்பில் சமூக அறிவியல் பாடப் பிரிவை தெர்ந்தேடுத்துள்ளோம். எனது மகள் உளவியல் துறையில் பட்டப்படிப்பு மேற்கொள்ள ஆசைப்படுகிறாள்” எனத் தெரிவித்தார்.
மேலும் மம்தா குறித்து பள்ளியின் முதல்வர் தீப்ஷிகா, “மம்தா ஒரு நல்ல மாணவி. இவர் பள்ளியிலுள்ள மற்ற மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு நல்ல முன்னுதாரணமாக திகழ்கிறார். அவர் எப்போதும் புன்னகையுடன் மகிழ்ச்சியாக இருப்பார். அவருடைய சாதனை மாற்றுதிறனாளிகள் பலருக்கும் ஒரு உத்வேகமாக இருக்கும்” எனக் கூறினார்.