போலி பாஸ்போர்ட் வழக்கில் சோட்டாராஜனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து டெல்லி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவருக்கு உதவியாக இருந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் 3 பேருக்கும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், குற்றவாளிகள் அனைவருக்கும் தலா 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு பாஸ்போர்ட் அலுவலகத்தில் மோகன்குமார் என்ற பெயரில் சோட்டா ராஜன் போலி பாஸ்போர்ட் பெற்றதாக 1998-ம் ஆண்டு சிபிஐ வழக்கு பதிவு செய்தது. மும்பை தாக்குதல் வழக்கில் தொடர்புடைய தாவூத் இப்ராகிமின் நெருங்கிய நண்பராக இருந்த சோட்டா ராஜன் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட 70 வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில் இருந்து தப்பிக்க நீண்ட ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சோட்டா ராஜனை 2015-ல் இந்தோனேஷியாவில் சர்வதேச போலீசார் கைது செய்து சிபிஐ போலீசாரிடம் ஒப்படைத்தனர். தற்போது திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.