ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மகா கூட்டணியின் பெரும் பின்னடைவுக்கு, அந்த அணியின் தொகுதிப் பங்கீட்டில் செய்த சொதப்பலும் ஒரு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.
பீகாரில் 2015 சட்டப்பேரவைத் தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து மகா கூட்டணி அமைத்து வெற்றி பெற்றது. அந்தத் தேர்தலில் மகா கூட்டணி 178 இடங்களைக் கைப்பற்றியது. இதையடுத்து, ஜனதா தளம் சார்பில் நிதிஷ் குமார் முதல்வராகவும், ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.
2017-ல் இந்தக் கூட்டணியுடன் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு விரிசல் ஏற்பட்டது. தேஜஸ்வி உள்ளிட்டோர் மீது ஊழல் புகார் தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து சோதனை மேற்கொண்டதன் எதிரொலியால் கூட்டணி முறிவுக்கு வந்தது. இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் முற்றியதால், பீகார் முதல்வர் பதவியை நிதிஷ் குமார் ராஜினாமா செய்தார்.
அதன்பின்னர், நிதிஷுக்கு பாஜக ஆதரவு தந்ததால், அவர் மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார். துணை முதல்வராக பாஜகவின் சுஷில்குமார் மோடி பதவியேற்றார். 2015 பொதுத் தேர்தலின்போது, பாஜகவை கடுமையாக விமர்சித்த நிதிஷ், அந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்தது அப்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இந்த நிலையில், ஐக்கிய ஜனதா தளம் - பிஜேபி கூட்டணி இம்முறை இணைந்து நிதிஷ் குமாரையே முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தல் களம் கண்டது. இப்போது, இந்த அணிக்கு பெரும்பான்மை கிடைப்பது எளிதாகியிருக்கிறது.
தேஜஸ்வி செய்த தவறுதான் என்ன?
ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மகா கூட்டணிக்கும், ஆளும் ஐக்கிய ஜனதா தளமும், பாஜகவும் இணைந்த நிதிஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும்தான் நேரடி போட்டி இம்முறை நிலவியது. நான்காவது முறையாக ஆட்சியை தக்கவைக்கும் முயற்சியில் இருந்த நிதிஷ் குமாரை வீழ்த்த ஆர்.ஜே.டி, காங்கிரஸ், இடதுசாரிகள் இணைந்த மகா கூட்டணி அமைக்கப்பட்டது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பெரும்பாலானவை, தேஜஸ்வி ஆட்சியைப் பிடிப்பார் என்றே கூறின.
குறிப்பாக, பீகார் முழுவதும் இளம் தலைவரான தேஜஸ்வியின் பிரச்சாரத்துக்கு கொரோனா அச்சுறுத்தலையும் மீறி மக்கள் அலை கூடியதும் கவனிக்கவைத்தது. ஆனால், தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் முடிவுகள் பல்வேறு கணிப்புகளையும் பொய்யாக்கும் வகையில் அமைந்திருக்கிறது. இதற்கு முக்கியக் காரணமாக, தேஜஸ்வியின் மகா கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டில் சொதப்பல் நேர்ந்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
கடந்த 2015 தேர்தலில், மகா கூட்டணியில் காங்கிரஸுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதில், அந்தக் கட்சி 27 இடங்களில் வெற்றி பெற்றது. இம்முறை, மகா கூட்டணி சார்பில் காங்கிரஸுக்கு மொத்தம் 70 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அவற்றில், 21 இடங்களை மட்டுமே இப்போது கைப்பற்றும் நிலையில் இருக்கிறது காங்கிரஸ். முந்தையத் தேர்தலுடன் ஒப்பிடும்போது 6 இடங்கள் குறைவு. அதாவது, இம்முறை ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் பாதி எண்ணிக்கையைக் கூட வெல்ல முடியாத நிலையில் உள்ளது.
அதேவேளையில், இந்தக் கூட்டணியில் 144 இடங்களில் போட்டியிட்ட ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி 65 இடங்களைக் கைப்பற்றும் நிலையில் இருக்கிறது. முந்தைய தேர்தலுடன் ஒப்பிடும்போது 15 இடங்கள் குறைவு என்பதும் கவனிக்கத்தக்கது. ஆனால், ஒதுக்கிய இடங்களில் பாதிக்கு சற்றே குறைவான இடங்களைப் பிடிப்பதும் உற்று நோக்கத்தக்கது. ஆக, பல்வேறு காரணங்களைத் தாண்டி, மகா கூட்டணி தனது தொகுதிப் பங்கீட்டில் கோட்டை விட்டதும் இந்தப் பின்னடைவுக்கு முக்கியமான காரணமாகக் கருதப்படுகிறது.