வரும் மாதங்களில் சீரம் நிறுவனம் தனது கோவிஷீல்ட் தடுப்பூசி உற்பத்தியை மாதத்திற்கு 6.5 கோடியிலிருந்து 11 கோடியாக அதிகரிக்கவுள்ளதாக நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே பால் தெரிவித்தார்.
பாரத் பயோடெக் மற்றும் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா ஆகிய இரண்டு நிறுவனங்களும் தமது கோவிட் -19 தடுப்பூசிகள் உற்பத்தியை அதிகரித்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. இந்தியாவின் கோவிட் -19 பணிக்குழுவின் தலைவர் டாக்டர் வி.கே.பால் கூறுகையில், “உள்நாட்டு கோவிட் -19 தடுப்பூசி உற்பத்தி நிறுவனமான பாரத் பயோடெக் மாதத்திற்கு சுமார் 90 லட்சம் தடுப்பூசிகள் உற்பத்தி திறன் கொண்டது. இருப்பினும், இந்த ஆண்டு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்திற்குள் அதன் உற்பத்தி திறன் சுமார் 10 கோடி வரை உயரும் என கணித்துள்ளோம். இந்தியா முழுவதும் இதுவரை சுமார் 20.26 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகளை வழங்கியுள்ளோம். சுமார் மூன்று லட்சம் டோஸ் தடுப்பூசிகள் அடுத்த மூன்று நாட்களில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்
இந்தியாவில் கோவிட்-19 தடுப்பூசிகளின் முதல் டோஸை 15.90 கோடி நபர்கள் இதுவரை பெற்றுள்ளதாகவும், இரண்டாவது டோஸ் 4.36 கோடி பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.