குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றத்திற்கு கண்டனம் தெரிவித்து மும்பையை சேர்ந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரியான அப்துர் ரஹ்மான் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
குடியுரிமை தொடர்பான மசோதா மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேறியது. குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவாக 125 உறுப்பினர்களும், எதிராக 105 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். அவர் ஒப்புதல் அளித்தவுடன் மசோதா சட்டமாகவுள்ளது.
இந்நிலையில் மும்பையை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான அப்துர் ரகுமான், சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றத்திற்கு கண்டனம் தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்தவாக அறிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மசோதா நிறைவேற்றத்திற்கு கண்டனத்தை தெரிவிக்கிறேன். இது சட்டத்தை மீறிய செயலாகும். இதனால் நான் எந்து பணியை தொடரப்போவதில்லை. நாளை முதல் அலுவலகத்திற்கு செல்லமாட்டேன். இறுதியாக நான் ராஜினாமா செய்கிறேன். என்னுடன் சேர்ந்து பணிபுரிய நினைத்தவர்களுக்கு எனது வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை கொடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
பட்டியல் இனத்தவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கும், ஏழை மக்களுக்கும் ஆதரவாக ஜனநாயக முறையில் இந்த சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என பணிவுடன் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். இந்த மசோதா அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும். சகிப்புத்தன்மையுடனும், மதச் சார்பின்மையுடனும், நீதியுடன் ஒற்றுமையாக வாழ நினைக்கும் இந்து சகோதரர்கள், இந்த மசோதாவை எதிர்க்க வேண்டும் என நான் ஏற்கெனவே கோரிக்கை விடுத்துள்ளேன். சமூக ஆர்வலர்களும், சட்ட நிபுணர்கள் குழுக்களில் உள்ளவர்களும் இந்த மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் போராட வேண்டும். ” என்று தெரிவித்துள்ளார்.