டெல்லி தீஸ் அசாரி கீழமை நீதிமன்றத்தில் நடைபெற்ற மோதல் தொடர்பாக வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கார் பார்க்கிங் விவகாரம் தொடர்பாக கடந்த 2ஆம் தேதி டெல்லியில் அமைந்துள்ள தீஸ் அசாரி கீழமை நீதிமன்றத்தில், வழக்கறிஞருக்கும், காவலர் ஒருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இருவருக்கிடையேயான தகராறு சற்று நேரத்திலேயே பெரும் சண்டையாக மாறியது. இதையடுத்து அங்கிருந்த வழக்கறிஞர்களும் காவலர்களும் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ள நிலைமை மேலும் மோசமானது. இந்த சண்டையில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறை வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. நிலைமை மோசமடைவதை உணர்ந்த காவலர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து மோதல் தொடர்பான வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நிலைமையை கட்டுப்படுத்த தவறியதற்காக சிறப்பு காவல் ஆணையர் மற்றும் கூடுதல் துணை ஆணையர் ஆகியோரை இடமாற்றம் செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.பி.கர்கை நியமித்து, ஆறு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், மோதலில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டெல்லி காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பி காவல்துறை தலைமை அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்தினர்.காவல்துறையினரின் போராட்டத்துக்கான காரணங்களை உள்துறை அமைச்சகம் கேட்டிருந்தது. இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகத்திடம் டெல்லி காவல்துறை அறிக்கை தாக்கல் செய்தது.
இதற்கிடையே காவல்துறையினருக்கு ஆதரவு தெரிவித்து, அவர்களது குடும்பத்தினர் டெல்லி இந்தியா கேட் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவலர்களை தாக்கிய வழக்கறிஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என போராட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.