புனிதமான செங்கோலுக்கு உரிய கௌரவம் அளிக்கப்படாமல், பிரயாக்ராஜ் ஆனந்த பவன் மியூசியத்தில் வாக்கிங் ஸ்டிக்காக வைக்கப்பட்டிருந்ததாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் வைதீக முறைப்படி செங்கோல் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அனைத்து ஆதீனகர்த்தர்களின் ஆசியுடன் திருவாவடுதுறை ஆதினகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் பிரதமர் மோடியிடம் செங்கோலை வழங்கினார். தலைவணங்கி பெற்றுக் கொண்ட பிரதமர் மோடி, பதிலுக்கு ஆதீனகர்த்தருக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தருமபுரம் ஆதீனம், பிரதமருக்கு நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்தார்.
மதுரை ஆதீனகர்த்தரும் பிரதமருகக்கு பரிசாக ஒரு செங்கோலை வழங்க, கூடியிருந்த சிவனடியார்கள் திருஞானசம்பந்தரின் வேயுறு தோளிபங்கன் எனத் தொடங்கும் கோளறு திருப்பதிக பாடலை பாடி பிரதமருக்கு ஆசி வழங்கினர். இதன் பின் உரையாற்றிய பிரதமர் மோடி, ஆதீனகர்த்தர்கள் தமக்கு ஆசி வழங்க வேண்டும் என சொல்லி தாழ்ந்து கேட்டுக் கொள்வதாக குறிப்பிட்டார். சிவனடியார்களின் தரிசனம், சிவனருளால் தமக்கு கிடைத்திருப்பதாக பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சியில் புனிதமான செங்கோலுக்கு உரிய கௌரவம் அளிக்கப்படவில்லை என குறிப்பிட்டார்.
அலகாபாத்தில் உள்ள ஆனந்த பவன் அருங்காட்சியகத்தில் வாக்கிங் ஸ்டிக்காகவே செங்கோல் வைக்கப்பட்டிருந்ததாக விமர்சித்தார். இந்தியாவின் முன்னேற்றத்தை சகிக்க முடியாதவர்கள், ஒற்றுமையை உடைக்கவும் வளர்ச்சிக்கான பாதையில் தடைகளை உருவாக்கவும் முயல்வார்கள் என்று மோடி குறிப்பிட்டார். புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நாட்டின் மகத்தான பாரம்பரிய சின்னமான செங்கோல் நிறுவப்படவிருப்பது தமக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகவும் கூறினார். கடமையில் இருந்து தவறக்கூடாது என்பதையும் மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்பதையும் இந்த செங்கோல் எப்போதும் நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார். பின்னர் ஆசி வழங்க வந்த 25 ஆதீனகர்த்தர்களுடன் குழு பிரதமர்நரேந்திர மோடி குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். தமது இல்லத்திற்கு ஆதீனகர்த்தர்கள் வந்து ஆசி வழங்கியது தமக்கு கிடைத்த பெரும் பாக்கியம் என பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.