திடீர் ஆய்வுகளுக்கு ஆளில்லா ட்ரோன்களை பயன்படுத்தலாம் என்ற பிரதமர் மோடியின் கருத்துக்கு பதிலளித்த ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி, 'பிரதமர் லடாக்கிற்கு ட்ரோன்களை அனுப்பி, நமது பாங்காங் த்சோ ஏரியின் மீது சீனா எவ்வாறு பாலம் கட்டுகிறது என்பதைப் பார்க்க வேண்டும்' என்று கூறினார்.
இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள ஒவைசி, “பிரதமர் மோடி அருணாச்சலப் பிரதேசத்திற்கு ஆளில்லா ட்ரோன்களை அனுப்பி, அங்கு உங்கள் சிறந்த நண்பர் ஜி ஜின்பிங் இந்திய மண்ணில் தனது காலனியை உருவாக்கியுள்ளதை பாருங்கள். மேலும் லடாக்கிற்கு ட்ரோனை அனுப்பி, நமது பாங்காங் த்சோ ஏரியின் மீது சீனா எப்படி பாலம் கட்டுகிறது என்று பாருங்கள். தயவு செய்து உங்கள் ட்ரோனை வெப்ப நீரூற்று, டெம்சோக்கும் அனுப்பவும்” எனத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கப் பணியின் தரத்தை எங்காவது பார்க்க வேண்டும் என்றால், திடீரென ஆளில்லா ட்ரோன்களை அனுப்பி ஆய்வு செய்வதாகவும், எல்லாத் தகவல்களும் தனக்குக் கிடைப்பது யாருக்கும் தெரியாது என்றும் பிரதமர் மோடி கூறியதை அடுத்து ஒவைசி இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
கடந்த வாரம், கிழக்கு லடாக்கில் பாங்காங் த்சோ ஏரியில் சீனா இரண்டாவது பாலம் கட்டுவதாக தகவல் வெளியானது.
இரண்டாவது சீன பாலம் முதல் பாலத்தை விட பெரியது மற்றும் கனரக ராணுவ வாகனங்களை கொண்டு செல்ல பயன்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பேசிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி , இதுபோன்ற சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை இந்தியா ஒருபோதும் ஏற்கவில்லை. பாங்காங் ஏரியில் அதன் முந்தைய பாலத்துடன் சீனாவால் ஒரு பாலம் கட்டப்படுவதை நாங்கள் பார்த்தோம், நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று கூறினார்.