“எடப்பாடி பழனிசாமிக்கு சமூகநீதி என்றால் என்னவென்று தெரியுமா?” - சீமான் காட்டம்

“எடப்பாடி பழனிசாமிக்கு சமூகநீதி என்றால் என்னவென்று தெரியுமா?” - சீமான் காட்டம்
“எடப்பாடி பழனிசாமிக்கு சமூகநீதி என்றால் என்னவென்று தெரியுமா?” - சீமான் காட்டம்
Published on

`பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளரை ஆதரித்து விட்டு சமூக நீதியை நிலைநாட்டி விட்டோம் என அதிமுக-வினர் கூறுகிறார்கள். சமூகநீதி என்றால் என்ன என்று எடப்பாடி பழனிசாமி கூற வேண்டும்’ என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் `அக்னிபாத்’ திட்டம் பற்றி பேசிய சீமான், ``மத்திய அரசு தரப்பினர், ஏற்கனவே 15 லட்ச ரூபாய் வங்கியில் நமக்கு போட்டுள்ளனர். அதேபோன்று அக்னிபாத் திட்டத்தில் சேரும் இளைஞர்களுக்கு 12 லட்ச ரூபாய் கொடுக்க போகிறார்களா? அக்னிபாத் திட்டத்தில் இணையும் வீரர்களை எலெக்ட்ரீஷியன், பிளம்பர் ஆக்கப் போகிறோம் என மத்திய அமைச்சர்கள் கூறுகிறார்கள்.

அக்னிபாத் திட்டத்தில் எத்தனை இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்களை சேர்க்க போகிறீர்கள்? சிறுபான்மையினர் மக்களுக்கு இந்த நாட்டின் பாதுகாப்பு உள்ளதா? ஆர்எஸ்எஸ்க்கான ஆள்சேர்ப்பு தான் அக்னிபாத் திட்டம். நான்கு ஆண்டுகளுக்கு ராணுவத்திற்கு ஆள் எடுத்தால் நாட்டை எவ்வாறு பாதுகாப்பது? இது எந்த மாதிரியான அணுகுமுறை, தேசபக்தி? அக்னிபத் திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் கடுமையாக எதிர்க்காமல் இருப்பதற்கு காரணம் என்ன? அக்னிபாத் திட்டத்தை நாம் தமிழர் கட்சி எதிர்க்கிறது” என்றார்.

பின் குடியரசு தலைவர் தேர்வு குறித்து அவர் பேசுகையில், “தேசத்தின் முதல் குடிமகனையே மக்கள் தேர்வு செய்ய முடியாது என்கின்ற அமைப்பு முறை சரியானதாக இருக்குமா? அதிக அளவு பழங்குடி மக்கள் பாதிக்கப்பட்டது மோடியின் ஆட்சியில் தான். பழங்குடி பெண் குடியரசுத்தலைவராக வருகிறார் என்பதற்காக வேண்டுமானால் எனது வாழ்த்துக்கள். ஆனால் ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவராக இருந்ததால் பட்டியலின மக்களுக்கு எந்த நன்மை நடந்தது ?

ஐநாவில் கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாக இருப்போம் என மோடி கையெழுத்து போட்டுவிட்டு, நுபூர் சர்மாவை இதுவரை கண்டிக்கக் கூடவில்லை. இன்னொரு பக்கம் பாஜகவின் குடியரசுத் தலைவர் வேட்பாளரை ஆதரித்து விட்டு சமூக நீதியை நிலைநாட்டி விட்டோம் என அதிமுக-வினர் கூறுகிறார்கள். சமூகநீதி என்றால் என்ன என்று எடப்பாடி பழனிசாமி கூற வேண்டும். என் அப்பா என்பதினால் அவர் செய்யும் தவறு சரியாகுமா?

மகாராஷ்டிராவில் ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு 130 கோடி கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்தப் பணத்தில் பென்சனை மிச்சப்படுத்த வேண்டியதுதானே? அடிப்படை ஜனநாயகத்தை மதிக்காதவர்கள்; அறமற்ற கட்சி என்றால் பாஜகதான். `கச்சத்தீவை மீட்க முடியும், ஆனால் முடியாது’ என்று அவர்கள் தெரிவிப்பது வடிவேல் சொல்வது போல் உள்ளது. தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புகளை வைத்து பாஜக அரசியல் செய்கிறது” என்றார்.

அறநிலையத்துறை குறித்து பேசுகையில், “சிவன் இந்து கடவுளே இல்லை. இந்து சமய அறநிலையத்துறையை தமிழர் சமய அறநிலையத்துறை என மாற்ற வேண்டும்” என்றார்.

செய்தியாளர்: ந.பால வெற்றிவேல்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com