90 தொகுதிகள் கொண்ட ஜம்மு காஷ்மீர் மாநில சட்டப்பேரவைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறும் நிலையில் முதல் கட்டமாக 24 தொகுதிகளில் வரும் 18 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி ஸ்ரீநகர் மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய சாலை இணைப்புகளில் கூடுதல் பாதுகாப்புப்படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் பயணிகளைக் கண்காணிக்க பல சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், முக்கிய இடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் பாதுகாப்புப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மத்திய ஆயுதக் காவல் படைகளான மத்திய ரிசர்வ் காவல் படை (CRPF), எல்லைப் பாதுகாப்புப் படை (BSF), மத்திய தொழில் பாதுகாப்புப் படை (CISF), இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் (ITBP), Sashastra Seema Bal (SSB), மற்றும் தேசிய பாதுகாப்புக் காவலர் (NSG) ஆகிய பிரிவுகள் விரிவான முறையில் களமிறக்கப்பட்டுள்ளது. இரவில் 360 டிகிரி கேமரா பொருத்தப்பட்ட மொபைல் பதுங்கு குழி வாகனங்கள் மூலமாகவும் ரோந்து நடத்தப்படுகிறது.
தெற்கு காஷ்மீரில் உள்ள முக்கியமான பதற்றம் நிறைந்த வாக்குச் சாவடிகளுக்கு சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஜம்முவில், ஜம்மு- உதம்பூர் நெடுஞ்சாலை மற்றும் முக்கிய சந்திப்புகளில் படைகள் நிறுத்தப்பட்டு, பயணிகளைக் கண்காணிக்க பல சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீரில் நடைபெறும் முதல் சட்டமன்றத் தேர்தல் இது என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.