தன்பாலின உறவு என்பது குற்றமல்ல என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்திய தண்டனைச் சட்டத்தின் 377 ஆவது பிரிவு முதன் முதலில் 1860 ஆம் ஆண்டு, மெக்காலே பிரபுவினால் கொண்டுவரப்பட்டது. அக்காலத்திய கலாசாரத்தின் தாக்கம் உச்சத்தில் இருந்த போது பிரிட்டனில் தன்பாலின சேர்க்கை குற்றம் என்றும் அதற்கு பத்து ஆண்டுகள் சிறை, அபராதம் விதிக்கும் வகையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னரும், இந்தச் சட்டம் இந்தியக் குடியரசின் சட்டங்களில் இருந்து நீக்கப்படவில்லை. எனினும் இதுவரை இந்தியாவில் இச்சட்டத்தின் கீழ் யாரும் தண்டிக்கப் படவில்லை. ஆனால், தன்பாலின சேர்க்கையாளர்களும், திருநங்கைகளும் இச்சட்டத்தினால் தாங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாகக் கூறுகின்றனர்.
1967ஆம் ஆண்டு பிரிட்டனில் இச்சட்டம் திரும்பப் பெறப்பட்டது. 20ஆம் நூற்றாண்டின் இறுதிக்குள் பெரும்பாலான மேலை நாடுகளில் தன்பாலின சேர்க்கைக்கு எதிரான சட்டங்கள் தடை செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து இந்தியாவிலும் 377ஆவது பிரிவை விலக்கிக் கொள்ள 2001 ஆம் ஆண்டு நாஸ் என்ற தனியார் அறக்கட்டளை சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. விசாரணை அடிப்படையில் கடந்த 2009ஆம் ஆண்டு ஜுலை 14ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் அஜீத் பிரகாஷ் ஷா மற்றும் முரளீதர் ஆகியோர் கொண்ட அமர்வு, தன்பாலின சேர்க்கை குற்றச்செயல் அல்ல தீர்ப்பளித்தது. சட்டத்தின் 377ஆவது பிரிவை திருத்தவும் நாடாளுமன்றத்திற்கு நீதிபதிகள் பரிந்துரைத்தனர்.
இந்த தீர்ப்பு தன்பாலின சேர்க்கையாளர்கள், திருநங்கைகளின் நல உரிமை அமைப்புகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. எனினும் மத அமைப்புகள் இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டன. 2013ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி உச்சநீதிமன்றம் தன்பாலினச் சேர்க்கை குற்றச்செயல் என தீர்ப்பு வழங்கியது. மேலும், இது தொடர்பான சட்டத்தை திருத்துவதும், திரும்பப்பெறுவதும் இந்திய அரசின் பொறுப்பு என்றும், நீதித்துறையின் பொறுப்பல்ல என்றும் அறிவித்தது. இரு நீதிபதிகள் கொண்ட அமர்வினால் அளிக்கப்பட்ட இத்தீர்ப்பினை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த உச்சநீதிமன்ற அப்போதைய தலைமை நீதிபதி டி.எஸ்.தாகூர் தலைமையிலான அமர்வு, 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்விற்கு மாற்றம் செய்தது. தற்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில், கடந்த ஜூலை 17ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. இந்நிலையில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய 5 பேர் கொண்ட அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. அதில் தன்பாலின உறவு குற்றமல்ல என தெரிவித்துள்ளது. அத்துடன் தன்பாலின உறவைத் தடை செய்யும் சட்டம் 377ஐ ரத்து செய்தது. மற்றவர்களுக்கு உள்ள உணர்வு மற்றும் உரிமை ஓரினச்சேர்க்கை சமூகத்தினருக்கும் உள்ளது என நீதிமன்றம் குறிப்பிட்டு தீர்ப்பளித்துள்ளது.