பாலுறவுக்கு துணையை தேர்வு செய்வது ஒருவரின் அடிப்படை உரிமை என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
தன் பாலின சேர்க்கையை கிரிமினல் குற்றம் எனக் கூறும் சட்டப்பிரிவு 377 அரசியல் சாசனப்படி செல்லுமா என்பது குறித்து உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இதில் 377வது பிரிவு அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனக் கூறி பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய நிலையில் நீதிபதிகள் அமர்வில் இடம் பெற்றுள்ள சந்திரசூட், பாலுறவுக்கான துணையை தேர்வு செய்வது ஒருவரின் அடிப்படை உரிமை என கருத்து தெரிவித்தார். இதற்கிடையில் ஒரு பாலினச் சேர்க்கையை குற்றமாக அறிவிக்கும் 377வது சட்டப்பிரிவு குறித்து உச்ச நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாண பத்திரத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 377வது சட்டப்பிரிவு அரசியல் சாசன நெறிகள் படி செல்லுமா என்ற கேள்விக்கு விடை காண்பதோடு உச்ச நீதிமன்றம் நிறுத்திக்கொள்வதே சரி என்றும் இதை தாண்டி வேறு அம்சங்கள் குறித்து விசாரிக்க முடிவு செய்தால் மத்திய அரசோடு அவசியம் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இவ்வழக்கில் இன்றும் தொடர்ந்து விசாரணை நடைபெற உள்ளது.