பெரும் பேரிடரான நிலச்சரிவில் இருந்து வயநாடு இன்னும் மீளவில்லை. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 400 ஐ கடந்துவிட்டது. வயநாடு நிலச்சரிவில் 7 சுற்றுலா ரிசார்ட்டுகள் இருந்த இடம் தெரியமால் மாயமாகியுள்ள நிலையில், அதிலிருந்த சுற்றுலா பயணிகளை தேடும் பணி நடைபெற்று வருகிறது..
கேரளா மாநிலத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்று வயநாடு. காண்போரைக் கவர்ந்திழுக்கும் அதன் அழகு, உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலா பயணிகளை தன்னை நோக்கி வரவழைத்தது. ஆனால் அவ்வாறு வந்தவர்களையும் நிலச்சரிவு விட்டு வைக்கவில்லை.
முண்டக்கை மற்றும் சூரல்மலை பகுதியில் இருந்த சுமார் 7 சுற்றுலா ரிசார்ட்டுகள், தற்போது கூகுள் மேப்பில் மட்டும்தான் இருக்கின்றன. இருந்த இடம் தெரியாமல் தரைமட்டமாகி உள்ளன.
இதனால் அவற்றில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகளின் விவரங்களை சேகரித்து, அவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். உள்ளூரை சேர்ந்த மாயமான மக்கள் யார் என்பதை, வாக்காளர் பட்டியல் உள்ளிட்டவை மூலமும், தப்பி பிழைத்த மக்களின் மூலமோ தெரிந்து கொள்ள இயலும். ஆனால் சுற்றுலா பயணிகள் குறித்த விவரங்களை சேகரிப்பது கடினமான பணியாகவே இருந்து வருகிறது.
ஓய்வெடுக்க, மன அழுத்தத்தை தணித்துக்கொள்ள என பல்வேறு காரணங்களுக்காக சுற்றுலா வந்தவர்களும், நிலச்சரிவில் சிக்கியது பெரும் சோகமே..!