கர்நாடகா மாநிலத்தில் ஹம்பி எக்ஸ்பிரஸ் தாமதமாக வந்ததால் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வை எழுத முடியாமல் போனது தெரியவந்துள்ளது
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நடந்து முடிந்துள்ளது. இத்தேர்வை 15.19 லட்சம் மாணவர்கள் எழுதினர். தமிழ்நாட்டில் மட்டும் 188 தேர்வு மையங்களில் 1,34,711 மாணவர்கள் தேர்வு எழுதினர். நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், இந்தி உட்பட 11 மொழிகளில் நடத்தப்பட்டது.
இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் ஹம்பி எக்ஸ்பிரஸ் தாமதமாக வந்ததால் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வை எழுத முடியாமல் போனது தெரியவந்துள்ளது. இதுகுறித்து கர்நாடகா மாநில முதலமைச்சரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “ஹம்பி எக்ஸ்பிரஸ் ரயில் 7 மணி நேரம் தாமதமாக வந்த காரணத்தால் வட கர்நாடகா மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களால் நீட் தேர்வு எழுத முடியாமல் போனது. இதற்கு கடைசி நேரத்தில் தேர்வு மையங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் சரியான தகவல் பரிமாற்றமின்மையும் தான் காரணம்.
இந்த விவகாரத்தில பிரதமர் மோடி, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் தலையிட்டு, தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு மீண்டும் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக ஹம்பி எக்ஸ்பிரஸ் பெங்களூருவிற்கு காலை 7 மணிக்கு வந்துவிடும். ஆனால் இன்று அதற்கு மாறாக காலதாமதமாக மதியம் 2.36 மணிக்கே ஹம்பி எக்ஸ்பிரஸ் பெங்களூரு வந்தடைந்தது. இந்த ரயில் தற்போது மாற்று பாதையில் இயக்கப்பட்டு வருவதால் இந்த கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ரயில் தாமதத்தால் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுத முடியாமல் போனது. எனவே அவர்கள் மீண்டும் தேர்வு எழுத பிரதமர் மோடி தலையிட்டு வாய்ப்பு வழங்கவேண்டும்” என ட்வீட் செய்துள்ளார்.