இந்தியாவில் கொரோனா 2-ஆவது அலை இந்தமாத மத்தியில் உச்சத்தை தொட்டு மே மாத இறுதி வரை நீடிக்கும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
நாட்டில் கொரோனா 2-ஆவது அலை வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 80 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் இறப்புகள் 500-ஐ நெருங்கிக்கொண்டுள்ளன. இந்நிலையில் கான்பூர் ஐஐடி-யைச் சேர்ந்த மணீந்தர் அகர்வால் என்ற விஞ்ஞானி கணிதவியல் கோட்பாடுகளை பயன்படுத்தி கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தினசரி கொரோனா தொற்றுகள் எண்ணிக்கை இன்னும் இரு வாரங்களில் அதாவது ஏப்ரல் 15-ஆம் தேதியிலிருந்து 20-ஆம் தேதிக்குள் உச்சத்தை தொடும் என்றும் இது பின்னர் படிப்படியாக குறைந்து அடுத்த மாத இறுதி வாக்கில் குறைந்த எண்ணிக்கையை தொடும் என்றும் மணீந்தர் அகர்வால் கூறியுள்ளார்.
பாரத ஸ்டேட் வங்கியின் ஆய்வுப் பிரிவு மேற்கொண்ட கணிப்பும் இதே போன்ற முடிவை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இது தவிர கவுதம் மேனன் என்ற ஹரியானா அசோகா பல்கலைக்கழக விஞ்ஞானியும் ஏப்ரல் மத்தியிலிருந்து மே மத்திக்குள் தினசரி இறப்புகள் உச்சத்தை தொடும் எனக் கூறியுள்ளார்.
கொரோனா முதல் அலையின்போது கணிதவியல் கோட்பாடுகள் படி மேற்கொள்ளப்பட்ட கணிப்புகள் தொற்று எண்ணிக்கை செப்டம்பரில் உச்சத்தை தொட்டு பிப்ரவரியில் குறையும் என கூறியிருந்ததும் அது அப்படியே நடந்ததும் குறிப்பிடத்தக்கது.