பொதுமுடக்கம் முடிவடைந்த பிறகு பள்ளிகளில் 50% மாணவர்களைக் கொண்டே கற்பிக்கும் முறையை அமல்படுத்த தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதுமுடக்கம் முடிந்த பிறகு தனிமனித இடைவெளியுடன் பள்ளிகளை திறப்பது குறித்து தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT) திட்டமிட்டு வருகிறது. இதுதொடர்பாக வரும் வாரத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வழிமுறைகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக பள்ளிகளில் மாணவர்களின் பதிவு எண்ணை வைத்து odd even policy எனப்படும் ஒற்றை, இரட்டை இலக்க அடிப்படையில் பிரித்து பாதி மாணவர்களை மட்டுமே சுழற்சி முறையில் பள்ளிக்கு வரவழைக்க திட்டமிட்டு வருவதாக என்.சி.இ.ஆர்.டி தெரிவித்துள்ளது.
வகுப்பறைகளில் தனிமனித இடைவெளியை பராமரிக்கும் வகையில் ஒற்றை, இரட்டை எண் இலக்கத்தில் பிரிக்கப்படும் மாணவர்களை ஒவ்வொரு வாரம் பள்ளிக்கு வரவழைப்பது குறித்தும் திட்டமிடப்படுவதாக என்.சி.இ.ஆர்.டி-யின் இயக்குநர் ஹ்ருஷிகேஷ் சேனாபதி தெரிவித்துள்ளார். இதுதவிர ஆன்லைன் மூலமாக கல்வியை கற்பித்து அவர்களுக்கான வீட்டுப்பாடங்களை வழங்குதல் போன்றவைகள் குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.