புதுச்சேரி அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை சார்பாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 2000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் காரைக்கால் அன்னை தெரசா பள்ளியில் என்.ஆர். காங்கிரஸ் காரைக்கால் வடக்கு தொகுதி ஆளும் கட்சி எம்.எல்.ஏ திருமுருகன் மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கினார். அப்போது, சைக்கிளின் பாகங்கள் தனித்தனியாக கழண்டு விழுந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், அனைத்து சைக்கிள்களையும் சோதித்துப் பார்த்தார். அப்போது மாணவர்களுக்கு வழங்க வேண்டிய அனைத்து சைக்கிள்களும் சேதமடைந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பிய எம்எல்ஏ திருமுருகன், மாணவர்களுக்கு தரமற்ற பழுதடைந்த சைக்கிளை கொடுப்பதால் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் யார் பொறுப்பேற்பார்கள் எனக் கேள்வி எழுப்பி விழாவை பாதியிலேயே நிறுத்திச் சென்றார். இதைத்தொடர்ந்து புதிய சைக்கிள் வரும் வரை பள்ளியில் யாரும் சைக்கிள் வாங்க வேண்டாம் என மாணவர்களிடம் எம்.எல்.ஏ கூறி சென்றார். மாணவர்களுக்கு வழங்க வேண்டிய சைக்கிளை சரிபார்த்து வழங்காமல் அலட்சிய போக்குடன் செயல்பட்ட கல்வித்துறைக்கு சமூக ஆர்வலர்களும் பெற்றோர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.