கர்நாடகாவின் சம்ராஜநகர் மாவட்டத்தில், தாயை பிரிந்து தவித்த வந்த குட்டியானையை அங்குள்ள பள்ளி குழந்தைகள் வாஞ்சையுடன் கவனித்துக்கொள்ளும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
பிலிகிரிரங்கனா என்ற மலைப்பகுதியிலிருந்து வழி மாறி தாயை விட்டு பிரிந்த குட்டி ஆண் யானையொன்று, அருகிலிருந்த புரனிபாடி என்ற கிராமத்துக்குள் நேற்று நுழைந்துள்ளது. அங்கிருந்த பள்ளியொன்றுக்கு அருகே மிகவும் பசியுடனும் சோர்வுடனும் சென்று சேர்ந்திருக்கிறது. இதைக்கண்ட அப்பள்ளி குழந்தைகள், குட்டி யானைக்கு தங்களிடமிருந்த பழங்களும், பாலும் சாப்பிட கொடுத்துள்ளனர். அதை சாப்பிட்ட பிறகு கொஞ்சம் தெம்பு பெற்ற பின், தனக்கு உணவு கொடுத்த குழந்தைகளுடன் விளையாட தொடங்கியுள்ளது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள், அங்கு கூட தொடங்கியுள்ளனர்.
இதற்கிடையே அப்பகுதி மக்கள் யானைக்குட்டி வழிமாறி வந்தது பற்றி வனத்துறை அதிகாரிகளுக்கு விரைந்து தகவல் தெரிவித்துள்ளனர். விஷயம் அறிந்து, தாய் யானை குட்டியை தேடுகிறதா என்பதை கண்டறிய எலந்தூர் வனச்சரக ஊழியர்கள் சுற்றியுள்ள வனப்பகுதியில் ரோந்து சென்றுள்ளனர். அப்போது வனப்பகுதியில் குட்டியை மிகத்தீவிரமாக தேடிக்கொண்டிருந்த தாய் யானையை அவர்கள் பார்த்துள்ளனர். இதைக்கண்டு தாய் யானை அதுதான் என உறுதிசெய்த அவர்கள், பின் குட்டியானையை அந்த இடத்துக்கு பத்திரமாக கொண்டுவந்து விட்டுள்ளனர்.
இடைபட்ட நேரத்தில் குட்டியானையை பத்திரமாக பார்த்துக்கொண்ட கிராமத்தினருக்கும், அதற்கு உண்ண தங்களிடமிருந்த உணவை வாஞ்சையுடன் கொடுத்த குழந்தைகளுக்கும் வனத்துறையினரும் விலங்கு நல ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.