கடந்த நவம்பர் 2022 ஆம் ஆண்டு, அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஒரு பள்ளியில் பயின்று வந்த தனது 12 வயது இரட்டை மகள்களை, அங்கு வார்டனாக இருந்த யும்கென் பக்ரா என்னும் நபர் பாலியல் வன்கொடுமை செய்ததாக தந்தை ஒருவர் புகார் அளித்திருந்தார். சம்பவம் நடந்த இடம், அரசால் நடத்தப்பட்ட விடுதிகளுடன் கூடிய பள்ளி என்பதால் அங்கிருந்த எதிர்க்கட்சிகள் சம்பவத்தை கடுமையாக கண்டித்திருந்தன. நாடு முழுவதும் இச்சம்பவம் பூதாகாரமாக வெடித்தது.
இந்நிலையில் இவ்வழக்கை, சிறப்பு புலனாய்வு குழு விசாரித்தது. இது குறித்தான குற்றப்பத்திரிகை கடந்த ஆண்டு ஜுலை மாதம் வெளியிடப்பட்டது. அதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
அதன்படி, 2014- 2022 இடைப்பட்ட காலத்தில் 6 முதல் 14 வயதுடைய 6 சிறுவர்கள் மற்றும் 15 மாணவிகளை வார்டன் யும்கென் பக்ரா பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்ற அதிர்ச்சி கர தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தது.
மேலும், குழந்தைகளிடம் அத்துமீறுவதற்கு முன்பு, குழந்தைகளுக்கு அந்த வார்டன் போதைப்பொருள் கொடுத்ததும், இது குறித்து வெளியில் தெரிவிக்க கூடாது என அவர்களை மிரட்டியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இத்துடன் இந்தக் கொடூரம் முடியவில்லை. வார்டனால் பாதிகப்பட்டவர்களில் 6 பேர் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம். குழந்தைகள் உதவி எண் 1098 க்கு, குழந்தைகள் தொடர்பான புகார்களை அளிக்கலாம்.)
தற்கொலைக்கு முயன்றோரில்லாமல், பாதிக்கப்பட்ட பிற மாணவ மாணவியர்கள் இதுக்குறித்து அப்பள்ளியின் இந்தி ஆசிரியை மற்றும் தலைமை ஆசிரியர் என இருவரிடத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.
ஆனால், வார்டன் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதில், “இதை வெளியே சொன்னால் பள்ளியின் பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுவிடும். எனவே அமைதியாக இருங்கள்” என்றுகூறி மிரட்டியுள்ளனர்.
இந்த திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்த பிறகு, வாடர்ன் யும்கென் பக்ராவின் மீது ஐபிசி பிரிவுகள் 328, 292, 506 மற்றும் போக்சோ சட்டத்தின் பிரிவுகள் 6,10,12 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது வாடர்ன் யும்கென் பக்ராவிற்கு அருணாச்சலப் பிரதேசத்தில் சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளது.
மேலும், குற்றத்தை வெளிப்படுத்த தவறியதற்காக முன்னாள் தலைமை ஆசிரியர் சிங்துங் யோர்பென் மற்றும் இந்தி ஆசிரியை நகோம்டிர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட சூழலில், அவர்கள் இருவருக்கும் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து உத்தரவிட்டது.